பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தது.


முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்திருந்தார்.


225 ரன்கள் என்ற இலக்குடன் பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்த டி20 தொடரில் நியூசிலாந்து 3-0 என தொடரை வென்று முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 58 ரன்களை எடுத்திருந்தார். 


பாகிஸ்தான் இப்படி ஒருதலைப்பட்சமாக தொடரை இழந்தது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன, ஆனால் இதனுடன் இந்தப் போட்டி தொடர்பான மற்றொரு விவாதமும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக்:


இந்த விவாதமானது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அசம் கானை பற்றியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அசம் கான் பேட்டிங் செய்ய கிரீஸுக்கு வந்தபோது, ​​டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் WWE மல்யுத்த வீரர் பிக் ஷோவின் எண்டரி மியூசிக் ஒலிக்கத் தொடங்கியது. இதனால், சமூக வலைதளங்களில் நியூசிலாந்தின் ஹோஸ்டிங் குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.






பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் அசம் கான் உடல் பருமன் அதிகம் கொண்டவர். அவரது எடை குறித்து பலமுறை விமர்சனங்களுக்கு ஆளானவர். அசம் கான் எடை குறித்து மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்றைய போட்டி நடைபெற்ற யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் உள்ள டிஜே, அசம் கான் பேட்டிங் செய்ய உள்ளே நுழைந்தபோது WWE மல்யுத்த வீரர் பிக் ஷோ இசை போட்டு அவரது உடல் பருமனை கிண்டல் செய்துள்ளார். பிக் ஷோ ஒரு WWE மல்யுத்த வீரர் மற்றும் அதிக எடை கொண்ட வீரர் என்ற பெருமையை கொண்டவர். 






சமூக வலைதளங்களில் இதை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இது மிகவும் தவறு குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், இது நியூசிலாந்து அணியின் வெட்கக்கேடான செயல் என்றும், இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூல வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.


நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.