நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை பே ஓவல் மைதானத்தில் ஆடி வருகிறது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து தொடக்கம் முதல் தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 328 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்காளதேச வீரர்கள் முதல் இன்னிங்சில் 458 ரன்களை குவித்து பிரமிப்பூட்டினர்.


இதையடுத்து, 164 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சிலும் தடுமாறியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அவர் 30 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் டஸ்கின் அகமது பந்தில் போல்டானார்.




இதையடுத்து, புத்தாண்டின் முதல் சதத்தை அடித்த டேவோன் கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 40 பந்தில் 1  பவுண்டரியுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ள ராஸ் டெய்லர் வில் யங்குடன் ஜோடி சேர்ந்தார்.


இருவரும் இணைந்து நிதானமாக அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய வில் யங் அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்து இருவரும் 73 ரன்கள் குவித்த நிலையில், சிறப்பாக ஆடி வந்த வில் யங் வங்கதேச பந்துவீச்சாளர் எபாதத் ஹூசைன் பந்தில் போல்டானார். அவர் 172 பந்தில் 7 பவுண்டரியுடன் 69 ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்சிலும் அவர் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




அடுத்து களமிறங்கிய ஹென்றி நிகோலசையும், விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டெலையும் 0 ரன்களிலே எபாதத் ஹூசைன் வெளியேற்றினார். நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 147 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து அணி 17 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.


இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடைசி நாளான நாளை நியூசிலாந்து அணியை விரைவில் வீழ்த்தி, குறைந்த இலக்கை சேஸ் செய்து போட்டியில் வெற்றி பெற வங்காளதேச வீரர்கள் தீவிரமாக ஆடுவார்கள். களத்தில் மூத்த வீரர் ராஸ் டெய்லர் மட்டுமே உள்ளார். இதுவரை பார்மில் இல்லாத அவரும், டெயிலண்டர்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்த மோசமான தோல்வியை அவர்களால் தவிர்க்க முடியும்.




வங்காளதேச வீரர் எபாதத் ஹூசைன் சிறப்பாக பந்துவீசி 17 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இன்னிங்சில் சிறப்பாக வீசிய வங்கதேச வீரர்கள்  ஷோரிபல் இஸ்லாம், மெகிதி ஹாசனும் நியூசிலாந்திற்கு நாளை நெருக்கடி அளிக்க உள்ளனர்.


இந்த போட்டியில் வெற்றி பெற்றால் வங்காளதேசம் முதன்முறையாக நியூசிலாந்து நாட்டில் டெஸ்ட் வெற்றியை பெற்றதாக வரலாற்று சாதனையை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த நாட்டில் 15 டெஸ்ட் ஆடியுள்ள வங்கதேசம் 12 டெஸ்டில் தோற்று 3 டெஸ்டை டிரா செய்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண