இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்திய அணி 325 ரன்களுக்கு தன்னுடைய அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் 10 விக்கெட்டையும் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் எடுத்து சாதனைப் படைத்தார். 


 


இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. இறுதியில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில்  நியூசிலாந்து எடுக்கும் மிகவும் குறைவான ஸ்கோர் இதுவாகும். அத்துடன் இந்திய மண்ணில் மிகவும் குறைவான ஸ்கோருக்கு சுருண்ட வெளிநாட்டு அணி என்ற தேவையில்லாத சாதனையையும் நியூசிலாந்து அணி படைத்துள்ளது. 


 


இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் மிகவும் குறைவான ஸ்கோரில் சுருண்ட வெளிநாட்டு அணிகள் யார்? யார்?


 


82/10- இலங்கை(1990):




1990ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முகமது அசாரூதின் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 288 ரன்கள் எடுத்தது. அதன்பின்பு களமிறங்கிய இலங்கை அணி வெங்கடபதி ராஜூவின் சுழற்பந்து வீச்சில் தடுமாறியது. அசத்தலாக பந்துவீசிய ராஜூ 12 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதன்பின்னர் ஃபாலோ ஆன் செய்து ஆடிய இலங்கை 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 


 


81/10- இங்கிலாந்து(2021):




இந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அப்போது அக்சர் பட்டேல் 6 வீழ்த்தி அசத்தினார். அடுத்து ஆடிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை மீண்டும் இந்திய அணி 81 ரன்களுக்கு சுருட்டியது. இம்முறை மீண்டும் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 


 


79/10-தென்னாப்பிரிக்கா(2015):




2015ஆம் ஆண்டு நாக்பூரில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அஸ்வினின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 32 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து இந்திய அணி களமிறங்கி 173 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 310 என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. 


 


62/10-நியூசிலாந்து(2021):




இன்றைய போட்டியில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் இந்திய மண்ணில் மிகவும் குறைவான ரன்களுக்கு சுருண்ட அணியாக நியூசிலாந்து முதலிடம் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 


மேலும் படிக்க: 62 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து.! அஸ்வின், முகமது சிராஜ் அபாரம்.!