நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டிலும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகின்றது. இதில் ஒருநாள் போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற முதலாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 


ஆஸ்திரேலியா - நியூசிலாந்து டெஸ்ட்:


இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 29ஆம் தேதி, வெலிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தொடங்கியது. ஆஸ்திரேலியா அணி 65 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதற்கடுத்து 89 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான ஆட்டத்தினை ஆஸ்திரேலியா அணியின் இளம் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு அணியை பலமான இடத்தை நோக்கி நகர்த்த உதவினார். 


கேமரூன் கிரீன் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 383 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேமரூன் கிரீன் 275 பந்துகளில் 23 பவுண்டரி 5 சிக்ஸர்கள் விளாசி 174 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். 


அதன்பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென இழந்ததால் அந்த அணியால் வலுவான நிலைக்கு செல்ல முடியவில்லை. நியூசிலாந்து அணியின் கிளின் பிலிப்ஸ் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 


ஆட்டநாயகன் கிரீன்:


அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் 369 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குறிப்பாக லையன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா மட்டும் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்திருந்தார். 


முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 


ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பேட் கம்மின்ஸ் அணியை தொடர்ந்து வெற்றியைப் பெற்றுத் தருகிறார். இதனால் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. அதேபோல் பெங்களூரு அணிக்கு டிரேட் செய்யப்பட்ட கேமரூன் கிரீன் இம்முறை சிறப்பாக விளையாடி அணிக்கு பக்கபலமாக இருப்பார் எனவும் நம்பப்படுகின்றது.