உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்தும், 2023 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு முறையில் எதிரணியாக இந்தியா தான் இருந்துள்ளது என்பது சற்று ஆறுதலான விஷயமாக ரசிகர்களுக்கு இருந்தது. 


டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தற்போது 9 அணிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டிகளில் பெறும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் மற்ற அணிகள் விளையாடும் தொடர்களின் முடிவுகளை பொறுத்தும் புள்ளிப்பட்டியல் மாறுபடும். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்துக்கு சென்று  டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 


நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வரும் நிலையில்  வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 383 ரன்களும், நியூஸிலாந்து அணி 179 ரன்களும் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்கள் எடுக்க, நியூஸிலாந்து அணிக்கு 369 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 






ஆனால் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி 64.58 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.அதனால் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 5 போட்டிகள் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா பெற்றுள்ளது. 


நியூசிலாந்து அணி அதேசமயம் நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் பெற்று 60 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி மற்றும் ஒரு டிரா ஆகியவை பெற்று 59.09 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.