நியுசிலாந்து அணியின் மூத்த மற்றும் அனுபவ வீரரான ராஸ் டெய்லர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுக்கெதிரான ஒருநாள் தொடரோடு அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற இருக்கிறார். தற்போதைய நியுசிலாந்து அணியின் மிக மூத்த வீரர்களில் ராஸ் டெய்லரும் ஒருவர். ஏறக்குறைய 17 ஆண்டுகளாக நியுசிலாந்து அணிக்காக ஆடி வருகிறார்.
நியூசிலாந்தை நெடுங்காலமாக ‘அண்டர்டாக்ஸ்’ என்கிற வகைமைக்குள்ளேயே கிரிக்கெட் உலகம் வைத்திருந்தது. இதனாலேயே அந்த அணியின் பெரும் திறமையாளர்கள் பலரும் பெரிதாக புகழ் வெளிச்சத்தைப் பெறாமலேயே இருந்தனர். மெக்கல்லம் கேப்டனாகி அதிரடியாக நியுசிலாந்து அணியை முன்னகர்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற காலக்கட்டத்தில்தான் நியுசிலாந்து ஒரு அணியாக முழுமையாக புகழ் வெளிச்சம் பெற்றது. மெக்கல்லம் ஓய்வுக்குப் பிறகு கேப்டனாகவும், அணியின் ஸ்டாராகவும் அவர் இடத்தை நிரப்பிவிட்டார் வில்லியம்சன். இதற்கிடையில் சிக்கிக்கொண்டவர்தான் ராஸ் டெய்லர்.
2006-ல் ஃபிளம்மிங்கின் காலக்கட்டதில் நியுசிலாந்து கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகினார் ராஸ் டெய்லர். தொடர்ந்து சிறப்பாக ஆடி அணியில் நிரந்தர இடம்பிடித்த சமயத்தில் பிரண்டன் மெக்கல்லம் அதிரடி சூரராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டார். அதன்பிறகு வில்லியம்சன் உலக அளவில் கவனம் ஈர்க்க, எப்போதுமே பெரிய புகழ் வெளிச்சம் படியாத நிலையிலேயே ராஸ் டெய்லர் இருந்தார். கொண்டாடப்படவில்லை என்பதற்காக அவரின் சாதனைகளையும் தனித்துவங்களையும் பதிவு செய்யாமல் இருந்துவிடமுடியாது.
உலக அளவில் மூன்று ஃபார்மட்களிலும் 100 போட்டிகளுக்கு மேல் ஆடிய முதல் வீரர் எனும் சாதனையை ராஸ் டெய்லரே செய்திருக்கிறார். நியுசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளிலும் ஓடிஐ போட்டிகளிலும் மற்றும் ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளிலும் அதிக ரன்களை அடித்திருப்பவர் ராஸ் டெய்லரே. டெஸ்ட் போட்டிகளில் 7584 ரன்களையும், ஓடிஐ போட்டிகளில் 8581 ரன்களையும் அடித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்திருக்கும் நியுசிலாந்து வீரரும் ராஸ் டெய்லரே.
நியுசிலாந்து கிரிக்கெட்டின் அடையாளமாகவும் மகத்தான வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்த மார்டின் க்ரோவே ராஸ் டெய்லருக்கு மெண்ட்டராக செயல்பட்டிருந்தார். 2006 இல் ராஸ் டெய்லர் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான காலக்கட்டத்தில் அவருக்கான இடத்தை தக்கவைத்து கொண்டதிலும், டெஸ்ட் கிரிக்கெட் ஆட தொடங்கியதிலும், கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மெக்கல்லமுக்கு கொடுக்கப்பட்ட காலத்திலும் ராஸ் டெய்லருக்கு தோளோடு தோள் நின்று அறிவுரைகளை வழங்கி டெய்லரின் கரியரை முன்நகர்த்தி சென்றதில் மார்டின் க்ரோவின் பங்கு அதிகமாக இருந்தது.
'என்னை ஒரு லிமிட்டெட் கிரிக்கெட்டராக மட்டுமே நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடினால் போதும் என்றே இருந்தேன். தொடர்ந்து ஆட வேண்டிய சூழல் ஏற்பட்ட போது மார்டின் க்ரோவையே அணுகினேன். நியுசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று கூறினேன். அவர்தான் என்னை வழிநடத்தினார்.' என ராஸ் டெய்லரே கூறியிருக்கிறார்.
நியுசிலாந்து அணிக்காக மார்டின் க்ரோ டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்களை அடித்திருக்கிறார். அதை மனதில் வைத்தே ராஸ் டெய்லர் அப்படி கூறியிருந்தார். மார்டின் க்ரோவும் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் ராஸ் டெய்லரை வழிநடத்தினார். ராஸ் டெய்லர் அவரின் விருப்பப்படியே டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்களுக்கு மேல் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரராக உயர்ந்தார். நியுசிலாந்து அணியின் முதல் ஐ.சி.சி தொடர் வெற்றியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் வின்னிங் ஷாட்டை அடித்தவர் ராஸ் டெய்லரே. ஆனால், இந்த தருணங்களை ராஸ் டெய்லருடன் இணைந்து கொண்டாட மார்டின் க்ரோ உயிருடன் இல்லை.
'ராஸ் டெய்லரை நினைத்து பெருமைக்கொள்கிறேன். அவர் தன்னைப் பற்றிய பிறரின் மதீப்பீடுகளை மதிக்கக்கூடியவர். அவருக்கு உதவி தேவையெனில் எதைப்பற்றியும் யோசிக்காமல் வெளிப்படையாக கேட்டுவிடுவார். அவரின் மீண்டெழும் திறனும் நேர்மையும் எனக்கே சில பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது' என மார்டின் க்ரோ ராஸ் டெய்லர் குறித்து பெருமிதம் கொள்வார்.
ராஸ் டெய்லர் கிரிக்கெட் புக்கில் உள்ள அத்தனை ஷாட்களையும் ஆடும் பேட்ஸ்மேனோ, நவீன டி20 பேட்ஸ்மேன்கள் போல 360 டிகிரி ஷாட்களோ உடையவர் கிடையாது. ஸ்லாக் ஸ்வீப், புல் ஷாட், லேட் கட் என ஒன்றிரண்டு டெம்ப்ளேட் ஷாட்களை மட்டும்தான் ஆடுவார். பெரும்பாலும் லெக் சைடில் மட்டுமே ஷாட்கள் ஆடுவதால் இவருக்கான லைன் & லென்த்தைப் பிடிப்பதை சுலபம். ஃபீல்ட் செட் செய்வது சுலபம். இப்படி குறைபாடுகளுடைய எளிதில் கணிக்கக்கூடிய டெக்னிக்குகளை உடைய ஒரு பேட்ஸ்மேன் ஒரு சில தொடர்களுக்குத் தாக்குப்பிடிப்பதே சிரமம். ஆனால், இந்த அமைதிப்புயலான ராஸ் டெய்லர் 17 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் வெற்றிகரமாக ஆடி வருகிறார். அதுதான் ஆச்சர்யம்! அதுதான் ராஸ் டெய்லரை கொண்டாடித் தீர்க்க வேண்டிய வீரராக மாற்றுகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் ஏறக்குறைய 50 சராசரி வைத்திருக்கிறார். டெஸ்ட், டி20 போட்டிகளில் ஆடினாலும் ஒருநாள் போட்டிகள்தான் ராஸ் டெய்லருக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஒருநாள் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளில் நியுசிலாந்து அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ராஸ் டெய்லர் மிக முக்கியக் காரணமாக இருந்தார். ஓப்பனிங்கிலும் லோயர் மிடில் ஆர்டரிலும் வீரர்கள் வருவார்கள், போவார்கள். சீரற்ற பெர்ஃபார்மன்ஸ்களைக் கொடுப்பார்கள். ஆனால், நம்பர் 4 பொசிஷனில் நியுசிலாந்துக்கு அப்படி எதுவும் நடந்ததே இல்லை. காரணம், அது டெய்லருடைய ஸ்பாட்.
20-40 ஓவர்களில் அவ்வளவு சீராக ஸ்கோர் செய்திருக்கிறார். சேஸிங்கின் போது பல சிறப்பான சம்பவங்களை செய்திருக்கிறார். 330+ சேஸிங்கின் போது இங்கிலாந்துக்கு எதிரான 181* இந்தியாவுக்கு எதிரான 109* இரண்டும் வெகு சமீபத்திய உதாரணங்கள். கடந்த மூன்று வருடங்களில் கேன் வில்லியம்சை விட ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி வைத்திருக்கிறார். ஆனாலும், கிரிக்கெட் உலகம் அவரின் மீது போதுமான வெளிச்சத்தை இன்னமும் பாய்ச்சவே இல்லை.
ஆனால், இதைப்பற்றியெல்லாம் ராஸ் டெய்லர் கவலைப்படுவதாகவே இல்லை. 2010-ல் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மோதிய ஒரு முத்தரப்பு தொடரின் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா 88 ரன்னில் ஆல் அவுட் ஆகியிருக்கும். முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து சார்பில் ராஸ் டெய்லர் 95 ரன்களை அடித்ததற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கும். எந்த சலனமும் ஆர்ப்பரிப்பும் இல்லாமல் சிறிய புன்னகையுடன் வந்து விருதை வாங்கியிருப்பார் டெய்லர். அங்கிருந்துதான் ராஸ் டெய்லர் என்னை ஈர்க்க ஆரம்பித்தார். அந்த 95 ரன்கள்தான் ராஸ் டெய்லரின் ஆட்டங்களை இன்று வரை பூரிப்போடு பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. யாரும் கொண்டாடாவிட்டாலும் எந்த புகழ் வெளிச்சமும் அவர் மீது விழாவிட்டாலும் மென் சிரிப்போடு மிட்விக்கெட்டில் பொளேரென ராஸ் டெய்லர் அடித்த ஷாட்கள் என்றைக்குமே மனதில் நிற்கும்.