நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் மூன்றாவது முறையாக தந்தையானார். இவரது மனைவில் சாரா ரஹீமுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 


வில்லியம்சன் தனது மனைவி சாரா ரஹீம் மற்றும் புதிதாக பிறந்த மக்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார். இதுகுறித்து அந்த பதிவின் தலைப்பில் “ இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்” என தெரிவித்தார். 






ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தந்தை: 


கேன் வில்லியம்சன் - சாரா ரஹூமுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. கேன் வில்லியம்சனின் மனைவிக்கு 2019 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மூத்த மகளின் பெயர் மேகி. இவருக்கு வயது 3. இவர்களின் மகன் 2022ல் பிறந்தார். இளைய மகனுக்கு தற்போது ஒரு வயது. முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நியூசிலாந்து டி20 தொடரில் வில்லியம்சன் தனிப்பட்ட காரணத்திற்காக விளையாடவில்லை. அதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் அடித்தார். இதன்மூலம், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக நியூசிலாந்து அணி வென்றது. 


சிறந்த பார்மில் வில்லியம்சன்:


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் நான்கு இன்னிங்ஸ்களில் கேன் வில்லியம்சன் மூன்று சதங்களை அடித்தார். மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற டெஸ்டின் முதல் இன்னிங்ஸ்களில் 118 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸ்களில் 109 ரன்களும் எடுத்தார். அதனை தொடர்ந்து, ஹாமில்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 43 மற்றும் 133 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 32 டெஸ்ட் சதங்களுடன் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களை வீழ்த்தி, அதிக டெஸ்ட் சதங்கள் அடுத்த பேட்ஸ்மேன் பட்டியலில் 12வது இடத்திற்கு முன்னேறினார். 


33 வயதான வில்லியம்சன் டெஸ்டில் அவரது 172 இன்னிங்ஸில் அடித்து அதிவேகமாக 32 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஸ்மித் 32 சதங்களை அவரது 174 இன்னிங்ஸ்களில் அடித்தார். ரிக்கி பாண்டிங் 176 இன்னிங்ஸ்களில் 32 சதங்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 179வது இன்னிங்ஸில் 32வது சதத்தை அடித்தார். 

டெஸ்டில் அதிவேக 32 சதங்கள்



  • கேன் வில்லியம்சன் - 172 இன்னிங்ஸ்

  • ஸ்டீவ் ஸ்மித் - 174 இன்னிங்ஸ்

  • ரிக்கி பாண்டிங் - 176 இன்னிங்ஸ்

  • சச்சின் டெண்டுல்கர் - 179 இன்னிங்ஸ்

  • யூனிஸ் கான் - 183 இன்னிங்ஸ்


விராட் வீட்டிலும் விஷேசம்: 


கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி இடையேயான நட்பு அனைவரும் அறிந்ததே. இருவரும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் நாட்களில் இருந்தே நண்பர்கள். இப்போது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் குழந்தையை வரமாக பெற்றுள்ளனர். இந்த மாதம், விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவும் தங்கள் இரண்டாவது குழந்தைக்கு பெற்றோரானார்கள். மூத்த மகள் வாமிகா பிறந்த பிறகு, தற்போது விராட் - அனுஷ்கா ஜோடிக்கு ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.