பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், டேரில் மிட்செல் அடித்த ஒரு சிக்ஸர் கேமராவை தாக்கியது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது, மிட்செல் ஒரு அற்புதமான சிக்ஸரை அடித்தார். இது கேமராவை தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது. 


போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது, நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல், அப்பாஸ் வீசிய 11வது ஓவரில் லாங் ஆனில் ஷாட்  சிக்ஸர் அடித்தார். அப்போது, பந்து நேராக கேமராவை தாக்கியது. இதன் காரணமாக கேமரா மீது பந்து பட்டதில் கேமராமேன் அதிருப்தியில் வெளியேறினார். மிட்செல் இந்த சிக்ஸரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இப்போட்டியில், மிட்செல் 10 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 17 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இவரால் பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டேரில் மிட்செல் 61 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






நலம் விசாரித்த பாபர் அசாம்: 


டேரில் மிட்செல், அப்பாஸ் அப்ரிடியின் பந்தில் சிக்ஸருக்கு அடித்த போது. பந்து எல்லைக்கு மேல் பறந்து கேமராவைத் தாக்கியது. அப்போது கேமராமேன் தனது ஹெட்ஃபோனைக் கழற்றிவிட்டு கடுப்பில் வேகமாக நடக்க தொடங்கினார். இதனால் அங்கு கேமராமேன் உணர்வை புரிந்துகொண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அங்கு சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து, இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினர். இதையடுத்து, இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





நியூசிலாந்து அணி வெற்றி:


நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பின் ஆலன் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்திருந்தார். 


195 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 173 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்திருந்தார். 


முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை நியூசிலாந்து அணி வீழ்த்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்து தொடர்ந்து 2 டி20 போட்டிகளில் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்த தொடரை வென்று கெத்துக்காட்டும்.