நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியின் வீரர் அலிஷன் ஷராஃபு பந்தை பளபளப்பாக்க உமிழ்நீரை பயன்படுத்தியதை அடுத்து, 5 பெனால்டி ரன்கள் நேபாள அணிக்கு வழங்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் ஐசிசி தனது புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அதில், உமிழ்நீரை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்கக் கூடாது என்ற விதியும் இடம்பெற்றுள்ளது. ஒருவேளை இந்த விதியை மீறும் பட்சத்தில் 5 பெனால்டி ரன்கள் எதிரணிக்கு சாதகமாக வழங்கப்படும்.
முன்னதாக, நேபாளத்தின் கிர்திபூர் நகரில் மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்நிலையில், இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கிர்த்திபூர் திரிபுவன் பல்கலைக்கழக சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது வாசீம் அரை சதம் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக அலிஷன் ஷரஃபு 35 ரன்கள் எடுத்தார். நேபாள தரப்பில் சோம்பால் காமி, ராஜ்பன்ஷி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு ஜாமீன்..!
192 ரன்கள் இலக்கு
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணி விளையாடியது. தொடக்கத்தில் தடுமாறிய அந்த அணி, பின்னர் சுதாரித்துக் கொண்டு நிதானமாக விளையாடியது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக அடித்து விளையாடினர்.
அப்போது பந்தை உமிழ்நீரை பயன்படுத்தி அலிஷன் ஷரஃபு பளபளப்பாக்கினார். இதை களத்தில் இருந்த நடுவர் வினய் குமார் கவனித்தார். புதிய ஐசிசி விதிகளின் படி உமிழ்நீரைப் பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்கினால் எதிரணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட வேண்டும். அதன்படி, நேபாள அணிக்கு 5 ரன்கள் அளிக்கப்பட்டது.
அந்த ஆட்டத்திலும் நேபாள அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி என்ற சமநிலையுடன் உள்ளது. தொடரை யார் வெல்வார் என்று தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.