NEP vs WI 2nd T20I: டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணிக்கு எதிராக முதல்முறையாக நேபாளம் அணி ஒரு தொடரை வென்று அசத்தியுள்ளது.
நேபாள அணி அபாரம்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், நேபாள அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அந்த அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணிக்கு எதிராக ஒரு தொடரை கைப்பற்றுவது நேபாள அணிக்கு இதுவே முதல்முறையாகும். இரண்டு முறை உலக சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, நேபாளம் போன்ற கத்துக்குட்டி அணியிடம் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று தொடரை இழந்து இருப்பது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
83 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன மேற்கிந்திய தீவுகள்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு அணிகளும் மோதும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நேபாளம் அணி நிர்ணயித்த 149 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல், 19 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியுற்றது. ஐசிசியின் முழுநேர உறுப்பு நாடு அணிக்கு எதிராக நேபாளம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 173 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, வெறும் 83 ரன்களை மட்டுமே சேர்த்து 17.1 ஓவர்களில் ஆல்-அவுட்டானது. இந்த இன்னிங்ஸில் மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்கங்களையே எட்டினர். இதனால், 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நேபாளம் அணி, 2-0 என தொடரையும் கைப்பற்றியது. முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதே அவர்களது மிகப்பெரிய வெற்றியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்னய்யா ஆச்சு உங்களுக்கு? ரசிகர்கள் வேதனை
சர்வதேச அளவில் டி20 போட்டிகள் என்றாலே, மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர்கள் தான் ரசிகர்களின் நினைவுக்கு வருவார்கள். அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர்போன அந்நாட்டு வீரர்கள், ஒற்றை ஆளாக போட்டியையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவர்களாக திகழ்கின்றனர். இதன் விளைவாகவே இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தினார். ஆனால், தற்போது நிதி சிக்கல் மற்றும் கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் குழப்பம் காரணமாக அணியே சிதைந்து போயுள்ளது. அதற்கு உதாரணமாக தான், இரண்டு முறை உலக சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியால், 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு கூட தகுதி பெற முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக தற்போது நேபாள அணிக்கு எதிராக தொடரையும் இழந்துள்ளது. இந்த மோசமான நிலையிலிருந்து மீண்டு, மீண்டும் வலுவான அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி உருவெடுக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.