ICC Womens World Cup 2025: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

Continues below advertisement


ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் இன்று தொடங்கி நவம்பர் 2ம்தேதி வரை நடைபெற உள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். மொத்தமாக 34 நாட்களில் 31 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிட்சையிலும், ஹாட் ஸ்டாரில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.



இந்தியா - இலங்கை இன்று மோதல்


மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. கவுகாத்தியில் உள்ள பரஸ்பர மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பை வென்றிடாத இந்திய அணி, சொந்த மண்ணில் நடைபெறுவதை தங்களுக்கு சாதகமாக்க விரும்புகிறது. இதனால் இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டுகிறது. அதே முனைப்பில் இலங்கை அணியும் இருப்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய அணி எப்படி இருக்கு?


கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் வலுவாக திகழ்கிறது. அந்த பிரிவின் மிகப்பெரிய நம்பிக்கையாக துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா திகழ்கிறார். நடப்பாண்டில் அதிரடியான ஃபார்மில் இருக்கும் இவர், இதுவரை 4 சதங்களை விளாசியுள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ப்ரதிகா ராவலும் ரன் குவிப்பை தொடர்கிறார். இவர்களுக்கு துணையாக ஹர்லின் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் மிரட்டலான ஃபார்மை தொடர்கின்றனர். அனைத்து வீராங்கனைகளும் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதால், பந்துவீச்சிலும் எதிரணிகளுக்கு நெருக்கடி தரும் வல்லமை கொண்டுள்ளது.


இலங்கை அணி எப்படி இருக்கு?


இந்தியா உடன் சேர்ந்து இந்த உலகக் கோப்பையை நடத்தும் இலங்கை, மீண்டும் பெண்கள் கிரிக்கெட்டில் அதன் சிறந்த வீராங்கனையான கேப்டன் சாமரி அட்டபட்டுவை உத்வேகத்திற்காக எதிர்பார்க்கும் . இருப்பினும், போட்டியில் இரண்டாவது வலிமையான அணியாக திகழும் இந்தியாவிற்கு எதிராக, வெற்றி பெற அந்த அணி கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.


இந்தியா Vs இலங்கை நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி மட்டுமே 31 போட்டிகளில் வென்று பெரும் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இலங்கை அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. 


மைதானம் எப்படி?


கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானம் பேட்டிங்கிற்கு உகந்த மேற்பரப்புக்கு பெயர் பெற்றது. பொதுவாக நல்ல பவுன்ஸ் மற்றும் கேரி திறனை வழங்குகிறது, இதனால் பேட்டர்கள் தங்கள் ஷாட்களை நம்பிக்கையுடன் விளையாட முடியும். போட்டியின் ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவினாலும், நேரம் செல்ல செல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனாலும் இது போட்டி முழுவதும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே உள்ளது.


உத்தேச பிளேயிங் லெவன்


இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (வி.கீ.), சினே ராணா, ராதா யாதவ், கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர்


இலங்கை : ஹாசினி பெரேரா, சாமரி அத்தபத்து (C), ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, அனுஷ்கா சஞ்சீவனி (WK), கவிஷா தில்ஹாரி, தேவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, அச்சினி குலசூரிய, உதேஷிகா பிரபோதனி, மல்கி மதரா