Harry Brook: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் கடைசி ஓவர்ல், ஹாரி ப்ரூக்கின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.


இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதல்:


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்:


இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரான் அதிகபட்சமாக 82 ரன்கள் சேர்க்க, அவருக்கு உறுதுணயாக  போவெல், ரூதர்ஃபோர்ட் ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு மொத்தமாக 222 ரன்களை குவித்தது.


பில் சால்ட் அதிரடி சதம்:


கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். பட்லர் 51 ரன்களில் ஆட்டமிழக்க, சால்ட் 56 பந்துகளை எதிர்கொண்டு 9 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 109 ரன்களை குவித்தார். ஜாக்ஸ் 1 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 19 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 202 ரன்களை சேர்த்து இருந்தது. 






கடைசி ஓவரில் ப்ரூக் அட்டகாசம்:


இதனால் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டது. அதுவரை 2 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்களை சேர்த்து இருந்த ஹாரி ப்ரூக் கடைசி ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரை மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஆண்ட்ரே ரஸல் வீசினார்.  அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு விளாசினார் ப்ரூக். தொடர்ந்து நான்காவது பந்தில் 2 ரன்கள் சேர்க்க, ஐந்தாவது பந்தையும் சிக்சராக விளாசி இங்கிலாந்து அணிக்கு த்ரில் வெற்றி பெற்று தந்தார். ஹாரி ப்ரூக்கின் அபாரமான ஆட்டம் தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 7 பந்துகளில் 31 ரன்களை சேர்த்து ப்ரூக்கும், 109 ரன்களை சேர்த்து சால்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற நிலையை எட்டியுள்ள இங்கிலாந்து, தொடரை கைப்பற்றும் வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது.