தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்பு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று தென்னாப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அதன்பின்னர் இந்திய வீரர்கள் இந்த வெற்றியை சிறப்பாக கொண்டாடினர். 


இந்நிலையில் செஞ்சுரியன் போட்டிக்கு பிறகு ஓட்டலுக்கு சென்ற இந்திய அணிக்கு அங்கு இருந்த ஊழியர்கள் பாரம்பரிய நடனத்துடன் இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளித்தனர். அதில் அவர்களுடன் சேர்ந்து இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோவை ஒருவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடம் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 






முன்னதாக போட்டிக்கு பிறகு ரவிச்சந்திரன் அஷ்வின், புஜாரா,முகமது சிராஜ் நடனமாடியிருந்தனர். இதுதொடர்பான வீடியோவை ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “எப்போதும் போட்டி முடிந்த பிறகு புகைப்படம் எடுப்பது மிகவும் சலிப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் வழக்கத்திற்கு மாறாக முதல் முறையாக புஜாரா நடனம் ஆடினார். அவருடன் சேர்ந்து சிராஜூம் நடனம் ஆடினார். இது மிகவும் மறக்க முடியாத தருணமாக அமைந்து” எனக் கூறினார்.   


 






வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜோகனிஸ்பேர்கில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் தற்போது 2021-22 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் செஞ்சுரியன் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக ரத்தானது. அப்படி இருக்கும் போது வெறும் 4 நாட்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 3ஆம் தேதி ஜோகனிஸ்பேர்கில் நடைபெறுகிறது. 


மேலும் படிக்க:  ஐ.சி.சி. சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்லப்போவது யார்? நிலவும் கடும் போட்டி!!