Harbhajan About T20 WC & MSD: 2007ம் ஆண்டு இதே நாளில், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இந்திய அணி இன்றுடன் டி20 உலக கோப்பையை வென்று 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய கிளாஸ் ஆஃப் 2007: தி ரீயூனியன் ஆஃப் '07 சாம்பியன்ஸ்' நிகழ்வில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள் தங்களது உலககோப்பை அனுபவத்தினை பகிர்ந்துள்ளனர். இதில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ள விஷயம் மிகவும் கவனம் பெற்றுள்ளது.
அந்த நிகழ்வில், அவர் கூறியதாவது, "2007 உலககோப்பையினை வெல்லும் வரையில் தோனி தான் எங்களின் கேப்டன் என நம்பவே முடியவில்லை. அவர் போட்டியின் ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் அவர் அனைவரிடத்திலும் ஆலோசனை கேட்டு, ஆவற்றில் எது மிகவும் சிறப்பான ஆலோசனையோ அதனை நாம் பின்பற்றுவோம் என கூறுவார். மேலும், அனைத்து வீரர்களுக்கும் முழு சுதந்திரத்திடன் தங்களின் விளையாட்டினை வெளிப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குவார்" எனவும் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்காக தோனி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணி அறிவிக்கப்பட்டபோது கடும் விமர்சனமானது. இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் போன்ற முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் முதல் வெளிநாட்டு விமர்சகர்கள் வரை பெரும்பாலானோர் இந்த இந்திய இளம்படை லீக் சுற்றுகள் கூட தாண்டாது. 2007 ஒருநாள் உலகக் கோப்பை போலவே இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சொதப்பும் என்று கருத்து பரவியது.
இதைஎதையும் கண்டுகொள்ளாமல் இந்திய அணி, முதல் போட்டியிலேயே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதுவரை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை. ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானிடம் தோற்றுவிடும் என்ற கருத்தும் பரவியது. ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்தது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை முகமது ஆசிப் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இருப்பினும், ராபின் உத்தப்பாவின் அசத்தல் அரைசதம் மற்றும் தோனி மற்றும் இர்பான் பதான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 141 ரன்களை எட்டியது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி 1 பந்தில் 1 ரன்கள் என்ற நிலையில் ரன் எடுக்காமல் போட்டியை சமன் செய்தது. அதன் பிறகு விக்கெட் ஹிட் முறையில் இந்திய பந்துவீச்சாளர்கள் மூன்று முறை புல்ஸ் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது.
முதல் போட்டியைப் போலவே இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக், யூசுப் பதான் விரைவாக ஆட்டமிழந்ததால் இந்தியா தொடக்கத்தில் தடுமாறியது. கம்பீர் மட்டும் அன்றைய போட்டியில் ஒற்றை ஆளாக போராடி 54 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். அப்போது இளம் வீரராக இருந்த ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது.
வெற்றிக்காக 158 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆர்.பி. சிங் ஆரம்பத்தில் முகமது ஹபீஸ் மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோரின் விக்கெட்டை அதிவேகமாக கைப்பற்றினார். இர்பான் பதானும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை அள்ள, இந்தியா எளிதான வெற்றியைப் பெறுவது போல் தோன்றியது.
ஆனால் மிஸ்பா மட்டும் தனி ஒரு ஆளாகி இந்திய அணிக்கு பயம் காட்டினார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜோகிந்தர் சர்மா மீது நம்பிக்கை வைத்த தோனி வீச அழைத்தார். முதல் பந்து வைட் ஆகவும், அதைத் தொடர்ந்து அடுத்த பந்து டாட் பந்தாக விழுந்தது.
அடுத்த பந்து மிஸ்பா சிக்ஸருக்கு பந்தை அனுப்ப போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறியது. நான்கு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், மூன்றாவது பந்தில் ஒரு ஸ்கூப் விளையாட முடிவு செய்தார் மிஸ்பா. அது மிஸ்ஸாகி ஸ்ரீசாந்திடம் கேட்சாக இந்திய அணி முதல் டி20 உலகக் கோப்பையை தட்டி தூக்கியது. அன்று கோப்பையை கைப்பற்றிய நாளிலிருந்து இன்று வரை சரியாக 15 ஆண்டுகள் ஆகிறது.