BCCI: இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில்  நடைபெற்றது. மைதானத்தில் உள்ள ஈரப்பதத்தினைக் காரணம் காட்டி போட்டியின் ஓவர்கள் 20லிருந்து 8 ஆக குறைக்கப்பட்டது. இது குறித்து ரசிகர்கள் பலர், "மழையே பெய்யவில்லை..? பிறகு ஏன் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டது?" என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பி.சி.சி.ஐ.யால் மைதானத்தில் தேங்கியுள்ள நீரினை வெளியேற்ற முன் ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். 






மேலும், நேற்றைய போட்டியின் போது மழை பெய்யவே இல்லை. நேற்று முன்தினம் பெய்த மழையால் மைதானத்தில் மழைநீர் தேங்கி நின்றது. அதனை வெளியேற்றவே போட்டியின் ஓவர் குறைக்கப்பட்டதாகவும் சமூக வளைதளங்களில் ரசிகர்கள் சராமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் எனச் சொல்லும் பி.சி.சி.ஐ.யால் மழைநீர் வடிகால் ஏற்பாட்டினைச் செய்துகொள்ள முடியாதா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


நேற்று நடந்த இந்த போட்டியில் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் 43 ரன்கள் விளாசினார். இதன்காரணமாக 8 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. 91 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரில் அதிரடி காட்டினார். அவர் முதல் ஓவரில் மூன்று சிக்சர்கள் விளாசினார். அடுத்து இரண்டாவது ஓவரிலும் சிக்சர் அடித்து வந்தார். மறுமுனையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


இதைத் தொடர்ந்து வந்த விராட் கோலி இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அவர் 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த போது ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினார். இதன்காரணமாக இந்திய அணி 5 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி வெற்றி பெற்ற 18 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 






அப்போது களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா 6வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார். கடைசி 12 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாசினார். எனினும் அவர் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து அதே ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். கடைசி வரை கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசியிருந்தார்.


இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பறும் என்பதால் அந்தப் போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.