2008-ல் என்னைப் போன்ற ஒருவர் இருப்பது தோனிக்கு தெரியாது. அதனால், 2009-ம் ஆண்டு முதல் எம்.எஸ். தோனியின் விக்கெட்டைப் பெறுவதை எனது வாழ்க்கை இலக்காகக் கொண்டேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
வாழ்க்கையின் இலக்கு:
இந்திய அணிக்காக நீண்ட காலமாக விளையாடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் பேசிய அஸ்வின், “அனைரையும் போல் எனக்கும் கிரிக்கெட் விளையாடும் போது ஒரு கனவு இருந்தது.
அப்போது தோனி தான் உலகின் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கினார். 2008-ல் என்னைப் போன்ற ஒருவர் இருப்பது தோனிக்கு தெரியாது. அதனால், 2009-ம் ஆண்டு முதல் எம்.எஸ். தோனியின் விக்கெட்டைப் பெறுவதை எனது வாழ்க்கை இலக்காகக் கொண்டேன். சேலஞ்சர் கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடினார். அப்போது அவருக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் நான் விளையாடினேன். இதுதான் தமக்கு கிடைத்த வாய்ப்பு என்று நான் பிரமாதமாக பந்து வீசினேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் இவ்வளவு சிறப்பாக வீசினேனா என்று எனக்கு தெரியாது” என்று கூறினார்.
நெருக்கடிக்கு உள்ளான தோனி:
தொடர்ந்து பேசிய அவர்,”அப்போது நான் வீசிய ஒவ்வொரு பந்தும் எப்படி வீசினேன் என்று இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது. நான் வீசியபோது தோனி ரன் அடிக்க முடியாமல் மிகவும் நெருக்கடிக்கு ஆளானார். இந்த சூழலில் அவருடைய விக்கெட்டை இஷாந்த் சர்மா தான் எடுத்தார். நான்தான் பந்தை கேட்ச் பிடித்தேன். பிடித்துவிட்டு ஓவராக கத்தினேன். அப்போது அணியில் இருந்த பத்ரிநாத், அனிரூதா ஸ்ரீகாந்த் போன்றோர் என்னிடம் வந்து பயமுறுத்தினார்கள்.
பேஸ்புக்கில் அனுப்பிய மெசேஜ்:
தோனியின் கேட்ச்சை இப்படி பிடித்து விட்டு கத்துகிறாயே உன்னை எப்படி அணியில் அவர் சேர்ப்பார் என்று கூறினார்கள். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு இறுதியில் பேஸ்புக் பிரபலமாக இருந்தது. அப்போது நான் தோனி பெயரில் ஒரு அக்கவுண்ட் இருந்ததை பார்த்தேன். நான் அதில் ஹாய் என்று அனுப்பினேன். அவரும் எனக்கு ஹாய் என்று பதில் அனுப்பினார். உடனே இது நிஜமாகவே தோனி தானா என்று கேட்டேன்.
அதற்கு உடனே அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். உங்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு தோனி உலகக்கோப்பை வருகிறது. அதற்கு தயாராக இரு என்று கூறினார். நான் இது உண்மையா இல்லை பொய்யா? இந்திய அணிக்கு சேர்ந்து சில நாட்களில் எப்படி உலகக் கோப்பை விளையாட வாய்ப்பு வரும் என்றெல்லாம் யோசித்தேன்” என்ற அஸ்வின் ”இதை நான் யாரிடமும் கூறவில்லை ஆனால் பேஸ்புக்கில் வந்த மெசேஜ் படி உலக கோப்பை அணியில் என்னுடைய பெயரும் இருந்தது” என்று அஸ்வின் கூறியுள்ளார்.