இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சொந்த தோட்டத்தில்  டிராக்டர் ஓட்டி நிலத்தினை உழும்  வீடியோ தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது. 


இந்த வீடியோவை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 



கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் மகேந்திர சிங் தோனியின் ஆர்வம் இயற்கை விவசாயத்தின் பக்கம் சென்றது.   வைரலான ஒரு வீடியோவில், முன்னாள் இந்திய கேப்டன் ராஞ்சியின் புறநகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் நிலத்தை உழுது, டிராக்டரில் சவாரி செய்வதைக் காணலாம்.


ஊரடங்கு காலத்தின் போது, ​​தோனி இயற்கை விவசாயத்தில் ஆர்வத்தை உருவாக்கிய பின்னர், 8 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டரை வாங்கினார். 


தோனி தற்போது வசிக்கும் ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தர்பூசணி விதைகள் மற்றும் பப்பாளி விதைகளை விதைக்க தொடங்கி அதன் பின்னர், தனக்ஜ்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் தனது பண்ணை தேட்டத்தில் விவசாய பணிகளை செய்து வருகிறார்.   




தோனி இயல்பாலவே புதிய முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர் என்று தோனிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாம் சாப்பிட வேண்டிய சரியான உணவு மற்றும் காய்கறிகள் மற்றும் அது ரசாயனமற்றதாக இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக ஆர்கானிக் மீதான அவரது ஆர்வம் தோனிக்கு அதிகரித்துள்ளது எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


கார்கள் மற்றும் பைக்குகள் மீதான தோனியின் பேரார்வம் நன்கு அறியப்பட்டதாக இருந்தாலிம், இயற்கை வேளாண்மையில் அவரது புதிய ஆர்வம் நிச்சயமாக ஆரோக்கியமான உணவு மற்றும் காய்கறிகளுக்கு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 


சர்வதேச போட்டிகளில் ஓய்வு: 


2004 ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான எம்.எஸ். தோனி, கடைசியாக நடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் தனது சர்வதேச பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி தேர்வான போதும் தனது விருப்பத்தின் பேரில் தொடரில் இருந்து விலகினார். 


அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத வேளை, 2020 ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார். அட என்னப்பா இது, 3 ஐசிசி வென்று கொடுத்த கேப்டனுக்கு ஒரு பேர்வெல் கூட இல்லையே என்று ரசிகர்கள் ஏங்கினர். இது இல்லை என்றால் என்ன ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெறும் போது அவருக்கு மிகப்பெரிய கெளரவம் கிடைக்க வேண்டும் என்று இன்று வரை ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். 


ரசிகர்கள் மனதை நன்றாக அறிந்து கொண்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்தது. அதனால்தான் தோனி இன்று வரை ஓய்வு பெற முடியவில்லை என்றும் கூறப்பட்டது. 


அதன் அடிப்படையில், சென்னையில் மட்டும் சிஎஸ்கே போட்டி நடைபெற்றால் இந்த ஆண்டு கோப்பையை வென்று கொடுத்த பின்னர்  தோனி ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறலாம் என்று தெரிகிறது. அப்படி இல்லையெனில் சிஎஸ்கே அணி  சென்னையில் விளையாடும் முதல் போட்டியுடன் எம்.எஸ். தோனி ஓய்வு பெறலாம் என்று கூறப்படுகிறது. 


இந்தாண்டு தோனி எட்டவிருக்கும் மைல்கல்:


எம்.எஸ்.தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 234 போட்டிகளில் விளையாடி 4,978 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு 22 ரன்கள் எடுத்து 5,000 ரன்களை கடந்தால் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 7 வது வீரர் என்ற பெருமையை தோனி படைப்பார்.