ரசிகர்களால் கேப்டன் கூல் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி.  ஆனால், சில சமயம் அவரும் கோபம் அடைந்து இருக்கிறார் என அவருடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிய சுப்பிரமணியம் பத்ரிநாத் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.


தோனியின் கோபம்:


டி20 உலகக் கோப்பை 2007,ஒரு நாள் உலகக் கோப்பை 2011 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி 2013 ஆகிய முக்கிய ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரேஇந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் எம்.எஸ்.தோனி மட்டும்தான். சர்வதேச கிரிக்கெட் மட்டும் இன்றி இந்தியன் ப்ரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடரிலும் இவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. இப்படி பல்வேறு விதமான கோப்பைகளை வென்றாலும் அவர் கோபமாக இருப்பது என்பதே அறிதான ஒன்று தான். ஒரு சில நேரங்களில் நடுவருடன் எதாவது ஒரு பிரச்சனை என்றால் வாதம் செய்வார்.


ஆனால், ஆனால், சிஎஸ்கே அணியின் துவக்க காலத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே வீரர்கள் சரியாக விளையாடாததை அடுத்து தோனி கடுமையான கோபத்துடன் இருந்ததாக சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறி இருக்கிறார்.


எட்டி உதைத்த தோனி:


இது குறித்து பத்ரிநாத் பேசுகையில், "அவரும் மனிதர் தான். அவரும் சில சமயங்களில் அமைதியை இழப்பார். ஆனால், அது எப்போதும் ஆடுகளத்தில் நடந்தது இல்லை. அவர் எப்போதுமே தான் அமைதி இன்றி இருப்பதை எதிரணிக்கு வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி சென்னையில் நடைபெற்றது. நாங்கள் 110 ரன்களை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தோம். இடையே நாங்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தோம். நான் அனில் கும்ப்ளே பந்து வீச்சில் ஒரு ஷாட் அடிக்க ஆசைப்பட்டு எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகிவிட்டேன். நான் ஓய்வறைக்குள் நின்று கொண்டிருந்தேன். அப்போது தோனி உள்ளே வந்தார். அங்கு ஒரு சிறிய வாட்டர் பாட்டில் இருந்தது.


தோனி அதை எட்டி உதைத்தார். அந்த பாட்டில் பறந்து சென்று விழுந்தது. நாங்கள் அவரது கண்ணை பார்க்க கூட பயந்தோம். ஆனால், அவ்வளவுதான். அவர் அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதுதான் தோனி "என்று கூறியிருக்கிறார் பத்ரிநாத். 43 வயதான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த முறை அதாவது ஐபிஎல் சீசன் 18ல் அவர் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.