இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாகியவர் தோனி. லெஜண்ட் கிரிக்கெட்டராகிய தோனி கிரிக்கெட் மட்டுமின்றி வியாபாரத்திலும் கோலோச்சி வருகிறார். விளம்பர படங்களில் நடிப்பது மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தோனி, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பங்குதாரராகவும் உள்ளார். இதன்மூலம் அவருக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடிகளில் வருவாய் கிடைக்கிறது.
இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் கருடா ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை தோனியே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பங்குதாரராக தனது புதிய பயணத்தை தொடங்குவதில் ஆர்வமாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமானது சென்னையை அடிப்படையாக கொண்டு இயங்கும் ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். குறைந்த விலையில் ட்ரோன் தயாரிப்பதை நோக்கமாக கொண்டு இயங்குவதே தங்களது சேவை என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறிவருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் நாட்டில் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதை விவசாய மற்றும் நில அளவீடு பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் அறிவித்திருந்தது.
மேலும், தரமான ட்ரோன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போதிய ஊக்கத்தொகை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதையடுத்து, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ட்ரோன் தயாரிப்பில் இறங்கி வருகிறது. இந்த சூழலில், பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தற்போது ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக இறங்கியிருப்பது கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. தோனி பங்குதாரராக இணைந்ததையடுத்து அந்த நிறுவனத்தின் மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குதாரராக புதிய பரிணாமத்தை எடுத்துள்ள தோனிக்கு அவரது ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கல்வி தொடர்பாக புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி ஏற்கனவே சென்னையின் எப்.சி. அணிக்கும். ஸ்போர்ட்ஸ் பிட் அணிக்கும் துணை உரிமையாளராக உள்ளார். மேலும், கார்ஸ் 24, கடாபுக் நிறுவனத்தில் முதலீட்டாளராக உள்ளார். செவன் என்ற பிட்னஸ் மற்றும் லைப்ஸ்டைல் பிராண்ட் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்