இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்த போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் ஆட்மிழக்காமல் 115 ரன்களை குவித்து இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற அரிய சாதனையை படைத்துள்ளார்.
31 வயதான ஜோ ரூட் இன்று சதமடித்ததன் மூலம் 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 ஆயிரத்து 15 ரன்களை விளாசியுள்ளார். சர்வ்தேச கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 14வது வீரர் ஆவார். இங்கிலாந்து அணிக்காக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அலஸ்டயர் குக் படைத்துள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்காக 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 ஆயிரத்து 472 ரன்களை விளாசியுள்ளார்.
10 ஆயிரம் ரன்களை கடந்த ஜோ ரூட் விரைவில் குக்கின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக டெஸ்ட் ரன்களை விளாசிய வீரர் என்ற அரிய சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகிய மூன்று பேர் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டித்தொடரை 5-0 என்ற கணக்கில் மோசமாக இழந்த பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியை ஜோ ரூட் ராஜினாமா செய்தார். பின்னர், பென் ஸ்டோக்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். சாதாரண வீரராக களமிறங்கி ஜோ ரூட் மீண்டும் தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். தற்போதுள்ள வீரர்களில் உலகிலேயே தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக ஜோ ரூட், விராட்கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வில்லியம்சன் விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்