இந்திய அணி:
அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி சூர்யகுமார் தலைமையில் 3 டி20 போட்டியிலும், ரோஹித் ஷர்மா தலைமையில் 3 ஒரு நாள் போட்டியிலும் விளையாடியது இந்திய அணி. டி20 தொடரை இந்திய அணி வென்றாலும் ஒரு நாள் தொடரை ஒயிட் வாஷ் முறையில் இந்தியா இழந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கவுதம் கம்பீர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் இந்திய அணி விளையாடிய முதல் தொடரிலேயே தோல்வி அடைந்தது பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இச்சூழலில் தான் தனக்கு தேவையான பயிற்சியாளர்களை கம்பீர் தேர்ந்தெடுத்தார்.
புதிய பந்து வீச்சு பயிற்சியாளர்:
அதன்படி துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயரையும், நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் ரியான் டஸ்சேட்டையும் தேர்ந்தெடுத்தார். அதேபோல் பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கெலை அறிவித்தார். அதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் சீசனில் கடந்த 2023 ஆம் ஆண்டு லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்கல் இருந்தது தான்.
அப்போது லக்னோ அணியின் பயிற்சியாளராக கம்பீர் இருந்தார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் மோர்கல் இணையவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இணைய உள்ளார்.