கையில் கிடைச்சது தொலைஞ்சது ரொம்ப பிடிச்சது கிடைக்கும் என்கிற பாடல் வரிகள் போல லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஓவல் டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு சிராஜ் காரணமாக இருந்தார்.

இங்கிலாந்து தொடர்: 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றிப்பெற்றிருந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஐந்தாவது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. 

ஓவல் டெஸ்ட்:

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தது. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

374 ரன்கள் டார்கெட்:

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. இதையடுத்து, நேற்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் போப்-டக்கெட் அதிரடியாக ஆடினர். சிறப்பாக ஆடிய டக்கெட் அரைசதம் விளாசினார். 83 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வந்த ஒல்லி போப் பந்துகளில் 5 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

ஹாரி புரூக்-ரூட் தொல்லை

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார், 106 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை இருவரும் இணைந்து வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். ஜோ ரூட் சற்று நிதானமாக ஆட ஹாரி ப்ரூக் அடித்து ஆடினார்.

இந்த ஜோடியை கட்டுப்படுத்த இந்திய பவுலர்களால்  மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்ததால் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தது. அபாரமாக ஆடிய இருவரும் சதம்  விளாசினார். இதனால் இங்கிலாந்து பக்கமே வெற்றி என்று அனைவரும் நினைத்தனர். அப்போது தான் ஆகாஷ் தீப் புரூக்கின் விக்கெட்டை எடுத்தார்.

இதன் பின்னர் முகமது சிராஜின் அபார பந்து வீச்சில் சிக்கி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை கொடுத்தனர். இந்தப்போட்டி இந்திய அணி 6 ரன்கள் வித்தியாத்தில் த்ரில் வெற்றி பெற்றது

சிராஜின் அதிர்ஷ்டமும் துரதிருஷ்டமும்:

இந்த போட்டியில் நான்காம் நாளில் சிராஜ் ஹாரி புரூக்கின் கைட்ச்சை விட்டவுடன் போட்டி இங்கிலாந்து பக்கம் திரும்பியது. ஆனால் தனது அபார பந்துவீச்சால் இந்திய அணிக்கு வெற்றியை சிராஜ் தேடிக்கொடுத்தார். அதே போல் லார்ட்ஸ் டெஸ்டில்  வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்தியா தோல்வி அடைந்தது. அப்போது கடைசி- விக்கெட்டாக  சிராஜ் ஆட்டமிழந்து மனமுடைந்து நின்றார். ஆனால் இன்று ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கு இனிப்பான ஒரு வெற்றியை சிராஜ் தேடிக்கொடுத்தார்.