உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைச் சந்தித்தது. இறுதிப் போட்டி வரை தோல்வியே சந்திக்காமல் இருந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் அதிர்ச்சிகரமாக தோல்வியைச் சந்தித்தது மட்டும் இல்லாமல் உலகக் கோப்பையையும் இழந்தது. தோல்விக்குப் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர்கள் இருந்த டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்று, தோல்வியால் துவண்டு இருந்த இந்திய அணி வீரர்களை கவலையில் இருந்து மீட்கும் நோக்கத்தில் வீரர்கள் ஒவ்வருவரிடமும் பேசினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ அனைத்து வகை இணையதளத்திலும் வைரலாகி ட்ரெண்ட் ஆனது.
இந்த நிகழ்வு தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முகமது ஷமி ஓபனாக பேசியுள்ளார்.
அதில், “இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு நாங்கள் மனம் உடைந்து மிகவும் கவலையுடன் உட்கார்ந்திருந்தோம். எங்கள் இரண்டு மாத கடின உழைப்பு ஒரே ஒரு போட்டியால் நிராகரிக்கப்பட்டதைப் போல இருந்தது. இது எங்களின் மோசமான நாள். அந்த டிரெஸ்ஸிங் ரூமில் நான் உட்பட அனைவரும் மனச்சோர்வுடன் காணப்பட்டோம். பிரதமர் மோடி டிரெஸ்ஸிங் ரூமிற்கு வருகின்றார் என யாருமே எங்களிடம் கூறவில்லை. அவர் வந்ததால் அவரைத் தவிர்க்க முடியவில்லை. அப்போது நாங்கள் சாப்பிடும் மனநிலையில் கூட இல்லை. அவர் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் வந்ததைப் பார்த்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர் ஒவ்வொருவரிடம் வந்து பேசினார். பிரதமர் மோடி வந்து எங்களிடம் வந்து பேசிய பின்னர்தான் அணியில் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம். விவரிக்க முடியாத மன வேதனையில் இருந்த எங்களுக்கு அதில் இருந்து மீள பிரதமர் மோடி டிரெஸ்ஸிங் ரூமிற்குள் வந்து எங்களிடம் பேசியது உதவியாக இருந்தது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பின்னர், இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில். "அன்புள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்த உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் என்றைக்கும் நினைவுகூறப்படும். நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்போம்," என குறிப்பிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் மூன்று வகைக் கிரிக்கெட் விளையாடி வருகின்றது. தற்போது சிகிச்சை பெற்று வரும் ஷமி, தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.