Mohammed Shami: காயத்திலிருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காயத்திலிருந்து மீண்ட ஷமி:
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது காயமடைந்த ஷமி, ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 34 வயதான அவர் தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த விமானத்தில் ஏற வேண்டுமா என்பது குறித்து சிந்திக்க தேர்வாளர்களுக்கு நிறைய வழங்கியுள்ளார். அந்த அளவிற்கு தனது உடல் தகுதியை பயிற்சி ஆட்டங்களில் நிரூபித்து அசத்தியுள்ளார்.
கம்பேக் கொடுத்த ஷமி
ரஞ்சிக் கோப்பை போட்டியில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிராக, பெங்கால் அணிக்காக களமிறங்கிய ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசத்தலான பந்துவீச்சின் மூலம் உடற்தகுதியை நிரூபித்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் செல்வார் என்று ஊகிக்கப்பட்டது.
இருப்பினும், ஆஸ்திரேலியா செல்வதற்கு ஒரு போட்டி போதுமானதாக இல்லை. தற்போது நடந்து வரும் சையத் முஷ்டாக் டிராபிக்கான பெங்கால் அணியில் வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற்றார் . கடந்த 11 நாட்களில் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 23.3 ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஐந்து விக்கெட்டுகளில் மூன்று ஐதராபாத் அணிக்கு எதிராக வந்தவை. ரன்களை விட்டுக் கொடுப்பதிலும் மிகவும் சிக்கனமாக செயல்பட்டு திறம்பட விளங்கினார். இதனிடையே, 15 டாட் பால்களையும் வீசியுள்ளார். தொடர்ந்து, பெங்கால் அணி வியாழனன்று ராஜஸ்தானுக்கு எதிராக ராஜ்கோட்டில் விளையாட உள்ளது. ஷமி பிளேயிங் XI இல் தேர்ந்தெடுக்கப்பட்டால், இது 13 நாட்களில் அவரது ஏழாவது டி20 ஆகும்
ஆஸ்திரேலியா பறப்பாரா ஷமி?
ஷமி காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்பதற்கும், பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி மூன்று டெஸ்டுகளுக்கு அவர் களமிறங்க வேண்டும் என்பதற்கும் இந்த செயல்பாடுகள் போதுமானதாகவே உள்ளன. ஆனால், பிசிசிஐ என்ன முடிவு எடுக்க உள்ளது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஐசிசி போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கான தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக ஷமி திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 6ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது.