டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக, இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, 2 படுதோல்விகளுடன் இந்த தொடரை விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்தை நேற்று எதிர்கொண்டது இந்திய அணி. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் சூர்யகுமார் ஆடமுடியாததால், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டு, கேஎல் ராகுலுடன் அவர் தொடக்க வீரராக இறக்கபப்ட்டார். ரோஹித் 3ம் வரிசையிலும், கோலி 4ம் வரிசையிலும் இறங்கினர். ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டரையும் மாற்றி இறக்கியது இந்திய அணி.



புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் ஆடத்தெரிந்த மிதவேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் படுமட்டமாக பேட்டிங் ஆடினார்கள். 20 ஓவரில் வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்தது இந்திய அணி. அதனை எளிதில் சேஸ் செய்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. அந்த படுதோல்விக்கு பிறகு கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்திக்காமல், பும்ரா சந்தித்தார். அதனால் பல விமர்சனங்களுக்கு கோலி ஆளாகியுள்ளனர். அசாருதின் கோலியை கடுமையாக சாடியுள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் 1992, 96, 99 உலகக்கோப்பைகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்திய அணியின் வாய்ப்புகள் கத்தி முனையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அணியின் தலைவர் வந்து பேச வேண்டும் என்றும், மக்களுக்கு குறைந்த பட்சம் ஏன் இப்படி ஆடினார்கள், என்ன காரணம், பிட்சா?, போட்டியின் நேரமா, பனிப்பொழிவா, வீரர்களின் அவுட் ஆஃப் பார்மா என்பதை மக்கள் அறிய வேண்டும் இதற்கு கேப்டன் தான் பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்த அசாருதீன் கூறும்போது, “தோற்பதில் ஒன்றும் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால் முன்னே வந்து பேச வேண்டும். அதுதான் ஒரு கேப்டனுக்கு சரியாக இருக்க முடியும். தோல்விக்குக் காரணம் என்ன என்பதை மக்கள் அறிய வேண்டும். பும்ரா பேசுவதும் கோச் வந்து பேசுவதும் நீங்கள் பேசுவதும் ஒன்றாகி விடாது. பொதுமக்களைச் சந்தித்தாக வேண்டும். நீங்கள் வந்து காரணங்களை விளக்கவில்லை என்றால் மக்கள் என்ன நினைப்பார்கள்? தேவையற்ற வதந்திகள் பரவவே இது வழிவகுக்கும். கோலி தேசிய ஊடகங்களை சந்தித்தாக வேண்டும், அதுதான் முறை. மக்கள் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், தோல்விக்கு ஆன காரணங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் பத்திரிகைகள் தானே, இதைப் புறக்கணிக்கலாமா?” என்று கோலியை சாடியுள்ளார் அசாருதீன்.