டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில், பாகிஸ்தானின் புகழ்பெற்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இடம்பிடித்துள்ளார். 


நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடர் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிகள் ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், மீதமுள்ள இரண்டு போட்டிகள் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக, முகமது அமீர் கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து, அமெரிக்கா அணியில் விளையாடுவதற்காக அமீர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, அமீர் அமெரிக்காவில் கவுண்டி கிரிக்கெட், ஆஸ்திரேலியாவில் பிபிஎல், இலங்கையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்தார்.






இந்தநிலையில், சில வாரங்களுக்கு முன்பு, வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் சமூக வலைதளங்களில் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வரும் காலங்களில் தேவைப்பட்டால் தனது நாட்டிற்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார். இவரை தொடர்ந்து, இதே போன்ற காரணங்களால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம், தான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு விளையாட தயாராக இருப்பதாக அறிவித்தார். இவரும் தற்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். 


சாதனைகள்: 


கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது அமீர், பந்துகளை ஸ்விங் செய்வதில் வல்லவர். 2017ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் டிராபியை வென்றது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இதே முகமது அமீர்தான். 






இந்த போட்டிக்கு முன்னதாக, ஸ்பாட் பிக்சிங் மற்றும் மேட்ச் பிக்ஸிங்கிற்காக ஐந்தாண்டு தடைக்கு பிறகு, மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்து அசத்தினார். 


சர்வதேச கிரிக்கெட்டில் முகமது அமீரின் சில தனித்துவமான புள்ளிவிவரங்கள், சின்னச் சின்ன சாதனைகளின் பட்டியல் இங்கே:



  1. ஒருநாள் போட்டியில் 10வது விக்கெட்டுக்கு 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் (வெஸ்ட் இண்டீஸ் அணிக்கி எதிராக சயீத் அஜ்மலுடன் இணைந்து 103 ரன்கள் எடுத்தார்.)

  2. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 11வது வீரராக களமிறங்கி அரை சதம் அடித்த ஒரே வீரர்.

  3. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இளம் பந்து வீச்சாளர் என்ற சாதனை

  4. பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

  5. பாகிஸ்தான் அணிக்காக 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

  6. பாகிஸ்தானுக்காக 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்


மற்ற வீரர்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் ரெக்கார்ட்ஸ்களை ஒப்பிடும்போது, முகமது அமீர் இந்த சாதனைகள் சாதாரணமாக தோன்றாலாம். ஆனால், எதிரணிக்கு எதிராக அமீர் விக்கெட்டுகளை சொல்லி எடுக்கும் விதம், வித்தியாசமான லைன், பவுன்ஸ், ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் போன்றவை சமூக வலைதளங்களில் இன்றும் வைரலாகி வருகிறது.