MI New York: கேப்டன் நிக்கோலஸ் பூரனின் ருத்ரதாண்டவ சதத்தால் எம்.ஐ நியூயார்க் அணி மேஜர் லீக் தொடரின் முதல் கோப்பையை வென்றுள்ளது.
மேஜர் லீக் தொடர் அமெரிக்காவில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன், சர்வதேச வீரர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் எம்.ஐ நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதிக்கொண்டன.
இதில் முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர், களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எம்.ஐ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 10 பவுண்டரி 13 சிக்ஸர்கள் என மொத்தம் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் எம்.ஐ அணி மேஜர் லீக் தொடரின் முதல் கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய சியாட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிகாக் அதிரடியாக ஆடினார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் டி காக் மட்டும் சிறப்பாக ஆடினார். அவர் 52 பந்தில் 9 பவுண்டரி 6 சிக்ஸர் என மொத்தம் 87 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர் யாரும் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் கேப்டன் பார்னர்ல் மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினார். இறுதியில் சியாட்டல் அணி 20 ஓவர்காள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 183 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களமிறங்கிய நியூயார்க் அணி தனது முதல் விக்கெட்டை ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பாகவே இழந்தது. ஆனால் அதைப்பார்த்து எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தனது அதிரடி ஆட்டத்தால் சியாட்டல் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார் எம்.ஐ. நியூயார்க் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடினார். அவர் இந்த தொடரில் தனது முதல் சதத்தையும், எம்.ஐ அணியின் முதல் சதத்தையும் எட்டினார். 40 பந்துகளில் 6 பவுண்டரி, 10 சிக்ஸர் என 250 ஸ்டைர்க் ரேட்டில் இறுதிப் போட்டியில் அதிரடியாக சதம் விளாசினார். அதன் பின்னரும் ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரன் தனி ஒரு நபராக அணியை வெற்றி பெறவைத்தார்.
இறுதியில் எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 184 ரன்களை எட்டியது. இதன் மூலம் அறிமுக தொடரில் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை எம்.ஐ. நியூயார்க் அணி பெற்றுள்ளது. அதேபோல், இறுதிப் போட்டியில் தனிவீரராகவும் கேப்டனாகவும் சதம் விளாசிய முதல் வீரரானார் பூரன்.