நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகின்றனர். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இரு அணிகளும் நேற்று மோதினர். எடின்பர்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து அணியின் கப்திலும், பில் ஆலனும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, ஆலன் ஸ்காட்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். மறுமுனையில் கப்தில் பொறுப்புடன் ஆடினார். அவர் 31 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.




இந்த போட்டியில் 40 ரன்கள் எடுத்த மார்டின் கப்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த ரோகித்சர்மாவை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார்.






ரோகித்சர்மா இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிகளில் 128 போட்டிகளில் 3 ஆயிரத்து 379 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் 40 ரன்கள் விளாசியதன் மூலம் ரோகித்சர்மாவின் சாதனையை பின்னுக்குத் தள்ளி மார்டின் கப்தில் முதலிடத்தை கைப்பற்றி புதிய சாதனையை படைத்தார். மார்டின் கப்தில் 116 போட்டிகளில் ஆடி 3399 ரன்களை குவித்து தற்போது முதலிடத்தில் உள்ளார்.


கப்தில் இதுவரை டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2 சதங்கள், 20 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஆனால், ரோகித்சர்மா டி20 போட்டிகளில் 4 சதங்கள், 26 அரைசதங்களை விளாசியுள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி 99 டி20 போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 308 ரன்களுடன் உள்ளார். விராட்கோலி 30 அரைசதங்களை விளாசியுள்ளார்.


இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி ஆலன் சதத்தால் 20 ஓவர்களில் 225 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண