England Worldcup Upset: ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் யாரும் எதிர்பாராத விதமாக இங்கிலாந்து அணி பெற்ற தோல்விகளை இந்த தொகுப்பில் அறியலாம்.


இங்கிலாந்து அணி:


இன்று இந்தியா போன்ற நாடுகளில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் விளையாட்டாக மாறியுள்ள கிரிக்கெட்டை கண்டுபிடித்ததே இங்கிலாந்து தான். ஒவ்வொரு முறை ஐசிசியின் உலகக் கோப்பை தொடர் தொடங்கும்போதும், இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் என்ற பட்டியலில் இங்கிலாந்து நிச்சயம் இடம்பெறும். ஆனால், இதுநாள் வரை ஒரு டி-20 மற்றும் ஒரு ஒருநாள் உலகக் கோப்பையை மட்டுமே அந்த அணி கைப்பற்றியுள்ளது. அதேநேரம், ஒவ்வொரு தொடரிலும் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு சிறிய அணியிடம் இங்கிலாந்து தோற்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியுற்ற இங்கிலாந்து அணி, இதுநாள் வரையில் உலகக் கோப்பையில் சிறிய அணிகளிடம் தோற்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஆப்கானிஸ்தானிடம் தோல்வி, 2023:


நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வெறும் 215 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து யாருமே எதிர்பாராத விதமாக வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.


அயர்லாந்திடம் தோல்வி, 2022:


கடந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பையில், அயர்லாந்து அணி நிர்ணயித்த 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வந்தது. 105 ரன்கள் எடுத்திருந்தபோது தொடங்கிய மழை இடைவிடாது பெய்ததால், டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


வங்கதேசத்திடம் தோல்வி, 2015:


2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பயில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில், 276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக 260 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இதனால், இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.


அயர்லாந்திடம் முதல் தோல்வி, 2011:


கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பரபரப்பான லீக் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் என்ற இலக்கை கெவின் ஒ பிரெய்னின் அபார சதத்தால் அயர்லாந்து அணி சாத்தியமாக்கியது. இது இங்கிலாந்து மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையே வியப்படைய செய்தது.


வங்கதேசம் கொடுத்த அதிர்ச்சி, 2011:


வங்கதேசம் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், 2011ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது அது கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டது. அந்த அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி வெறும் 225 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 


நெதர்லாந்திடம் வீழ்ச்சி:


யாருமே எதிர்பாராத விதமாக, 2009ம் ஆண்டு உலகக் கோப்பையில் 4 விக்கெட் வித்தியாசத்திலும்,  2014ம் ஆண்டு உலகக் கோப்பையில் 45 ரன்கள் வித்தியாசத்திலும் நெதர்லாந்து அணியிடம் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. முன்னதாக, 1992ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் ஜிம்பாபே அணியிடம் இங்கிலாந்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.