AUS Vs SL World Cup 2023: லக்னோவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 14வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 13 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.
ஆஸ்திரேலியா - இலங்கை மோதல்:
லக்னோவில் உள்ள ஏகனா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இதுவரை விளையாடிய முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுமே தோல்வியுற்றுள்ளன. இதனால், புள்ளிப்பட்டியலில் முறையே இவை 8 மற்றும் 10 ஆகிய இடங்களில் உள்ளன. இன்றைய போட்டி மூலம் நடப்பு உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் & பலவீனங்கள்:
ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் வீரர்களை கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் களத்தில் தங்களது முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களை கணித்து விளையாடுவதில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை கண்ட அதே லக்னோ மைதானத்தில் தான் ஆஸ்திரேலிய அணி இன்றும் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இன்னும் சிறப்பாக செயல்படவிட்டால் இன்றைய போட்டியிலும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவே.
நேருக்கு நேர்:
சர்வதேச போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 102 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 63 முறையும், இலங்கை அணி 35 முறை வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
இந்தியாவில் உள்ள பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான மைதானங்களில் ஏகனா மைதானமும் ஒன்று. நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே பேட்ஸ்மேன்களால் ரன் சேர்க்க முடியும். டாஸ் வெல்லும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே சாதகமானதாக இருக்கும்.
உத்தேச வீரர்கள்:
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
இலங்கை:
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க
வெற்றி வாய்ப்பு: போட்டியில் வெல்லும் வாய்ப்பு ஆஸ்திரேலியா அணிக்கு அதிகம்