வயதானாலும் சிங்கம் சிங்கம்தான் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது வயதானலும் அவரது பலம் என்றும் மாறாது என்பதை குறிக்கும் விதமாக இந்த பழமொழியை குறிப்பிடுவார்கள். அந்த பழமொழியை உணர்த்தும் விதமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்:
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஐ.பி.எல். தொடரை மிஞ்சும் அளவிற்கு ஓய்வு பெற்ற வீரர்கள் அசத்தி வருகிறார்கள். சூரத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியும், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய கோனார்க் சூர்யாஸ் அணிக்காக லெவி 21 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க, யூசுப் பதான் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க அந்த அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக கேப்டன் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி – மார்ட்டின் கப்தில் ஆட்டத்தை தொடங்கினர்.
களமிறங்கியது முதலே மார்டின் கப்தில் அதிரடி மட்டுமே காட்டினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த கேப்டன் கோஸ்வாமி 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால், கப்தில் சிக்ஸரும், பவுண்டரிகளையும் விளாசித் தள்ளினார்.
அவரை கட்டுப்படுத்தவே முடியாமல் எதிரணியினர் விழித்தனர். குறிப்பாக, நவீன் ஸ்டீவர்ட் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் 6,6,6,4,6,6 என மொத்தம் 34 ரன்கள் எடுத்தார். தனி ஆளாக மிரட்டிய மார்ட்டின் சதத்தை கடந்தும் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இதனால், வெறும் 16 ஓவர்களில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது. 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் அணி 195 ரன்களை எடுத்தது. மார்ட்டின் கப்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 9 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் பவன் நெகி 11 பந்துகளில் 1 சிக்ஸருடன் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
38 வயதான மார்ட்டின் கப்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2022ம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அவர் 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 17 அரைசதங்கள் 2 ஆயிரத்து 586 ரன்களும், 198 ஒருநாள் போட்டிகளில் ஆடி 18 சதங்கள், 1 இரட்டை சதம், 39 அரைசதங்கள் விளாசியுள்ளார். 122 டி20 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 20 அரைசதங்களுடன் 3 ஆயிரத்த 531 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரிலும் 13 போட்டிகளில் ஆடி 270 ரன்கள் எடுத்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் தலைசிறந்த அதிரடி வீரரான மார்ட்டின் கப்தில் தொடக்க வீரராக அந்த நாட்டிற்காக பல போட்டிகளில் அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.