இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். ஐபிஎல் 2024க்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பொறுப்பு தற்போது மலிங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் பந்து வீச்சாளர் பயிற்சியாளர் பொறுப்பு ஷேன் பாண்ட் வசம் இருந்தது. ஷேன் பாண்ட் கடந்த 9 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீச்சாளர் பயிற்சியாளராக இருந்தார்.


கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, 2022ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார். 2022, 2023 என இரண்டு சீசன்கள் இந்த பதவியில் வகித்தார். 






மும்பை இந்தியன்ஸின் வழிகாட்டி: 


 2018ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார் மலிங்கா. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வீரராக இல்லாமல் துணைப் பணியாளராக இருப்பது இது இரண்டாவது முறை. மலிங்கா மும்பை இந்தியன்ஸுடன் அணியில் இருந்தபோது 5 முறை கோப்பையை வென்றது. இதில், 2013, 2015, 2017, 2019 நான்கு ஐபிஎல் மற்றும் 2011 சாம்பியன் லீக் என வென்றுள்ளது. 


மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 139 போட்டிகளில் விளையாடி 195 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 


ஷேன் பாண்ட்: 


ஷேன் பாண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கடந்த 2015ம் ஆண்டு இணைந்தார். மேலும், இவர் 2017 முதல் 2022 வரை மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 


ஷேன் பாண்ட் UAE (ILT20), தென்னாப்பிரிக்கா (SA20) மற்றும் USA (மேஜர் லீக் கிரிக்கெட்) ஆகிய லீக்களில் மும்பை அணியின் பயிற்சியாளராக உள்ளார். மேலும், வருகின்ற ILT20 இல் MI எமிரேட்ஸின் தலைமை பயிற்சியாளராக பாண்ட் தொடர்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.






சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்த எம்.எஸ்.கே பிரசாத்:


முன்னாள் இந்திய விக்கெட் கீப்பரும், தலைமை தேர்வாளருமான எம்.எஸ்.கே பிரசாத்துக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.