ஆஸ்திரேலியாவில் குல்தீப் யாதவ்:
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தாலும் ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைதொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் பல்வேறு நாடுகளில் நேரத்தை கழித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
என்னுடைய அடையாளம்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குல்தீப் யாதவ் மெல்போர்ன் கிரிக்கெட்டை மைதானத்தை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மறைந்த ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இச்சூழலில் ஷேன் வார்ன் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது ஏன் என்பது தொடர்பாக அவர் பேசியிருக்கிறார். அதில், "ஷேன் வார்னே சிலை எனக்கானது. அவருடன் எனக்கு மிகவும் வலுவான தொடர்பு இருந்தது. வார்னேவைப் பற்றி நினைக்கும் போது நான் இன்னும் உணர்ச்சிவசப்படுகிறேன். எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமையகம் மற்றும் அதன் சின்னமான MCG இல் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், இந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டியை எதிர்பார்க்கிறோம். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ள அணியை எப்போதும் ஆதரிப்பார்கள், மேலும் அவர்கள் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு, குறிப்பாக பாக்சிங் டே டெஸ்டின் போது அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று நான் நம்புகிறேன்"என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ். முன்னதாக குல்தீப் யாதவ் துலீப் டிராபியில் களம் இறங்க உள்ளார். சுப்மன் கில் தலைமையிலான ஏ அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.