இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கியது.  சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில்  நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து, களமிறமிங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 404 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


 


குல்தீப் பேட்டிங்கில் அபாரம்:


முன்கள வீரர்களான ராகுல், சுப்மன் கில், கோலி உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  புஜாரா, பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அஷ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதோடு, ஒன்பதாவது வீரராக களமிறங்கிய குல்தீப் யாதவ் நிலைத்து நின்று ஆடி 114 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 40 ரன்களை சேர்த்தார். டெஸ்டில் ஒரு போட்டியில் அவர் எடுத்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் இதுவாகும்.






பந்துவீச்சிலும் அசத்தல்:


பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ், வங்கதேச அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். முஸ்தபிசுர் ரஹீம், ஷகிப்-அல்- ஹசன், நூருல் ஹசன், தைஜுல் இஸ்லாம் மற்றும் ஹுசைன் ஆகியோரை, ஆட்டமிழக்கச் செய்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 16 ஓவர்களை வீசி 40 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இது டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் மாறியுள்ளது.






இதன்படி, ஒரே போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவிற்கு, சக விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த குல்தீப் யாதவிற்கு, கடந்த 18 மாதங்களாக எந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதும், குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு கவனம் ஈர்த்துள்ளார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என, பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.