பங்களாதேஷின் லிட்டன் தாஸிடம் சென்று சில வார்த்தைகளைக் கூறி வம்பிழுத்த பிறகு அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் என்ன கூறினார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
லிட்டன்-சிராஜ் வாக்குவாதம்
பங்களாதேஷுக்கு எதிரான சட்டோகிராம் டெஸ்டின் இரண்டாவது நாளில் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால், தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் குல்தீப் யாதவின் வலுவான கீழ்-வரிசை பேட்டிங்கால் 400 ரன்களை தொட்டு பந்தி வீச வந்ததும், முதல் பந்திலேயே முகமது சிராஜ் விக்கெட் எடுத்து கொடுத்து இந்திய அணிக்கு சாதகமாக ஆட்டத்தை திரும்பினார். அவரது பந்து வீச்சில் டாப் ஆர்டர் நிலை குலைய, லிட்டன் தாஸ் மட்டும் அதிரடியாக சில ஷாட்களை அடித்தார். அப்போது சிராஜ் அவரிடம் ஏதோ சொல்ல, பதிலுக்கு அவர் சிராஜை சீண்டுவது போல கையை காதில் வைத்து சைகைகள் செய்ய, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு சிராஜே அவரது விக்கெட்டை அடுத்த ஓவரிலேயே எடுக்க விராட் கோலி அதே போல காதில் கை வைத்து சைகை செய்து கேலி செய்ய ஆட்டத்தில் அனல் பறந்தது.
விராட் கோலி பதிலடி
டெஸ்ட் போட்டி என்றாலே விராட் கோலியின் அக்ரசிவ் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதிலும் எதிரணியினர் இப்படி செய்யும்போது இறங்கி அடிப்பார். ஆனால் அதற்கு முன் சிராஜ் லிட்டன் தாஸுடன் வாய் வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அப்போது என்ன பேசினார்கள் என்பதை இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் பின் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மொஹமட் சிராஜ் நஜ்முல் ஹொசைன் சாண்டோவை கோல்டன் டக் செய்து அனுப்பிய பின்னர், வலுவான பதிலடி கொடுப்பதற்காக களமிறங்கிய பங்களாதேஷின் நம்பிக்கை இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிதைந்தது.
லிட்டன் வெளியேற்றம்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களின் பொறுமையை சோதித்தார். அப்போது சிராஜின் அசுரத்தனமான பந்தை பங்களதேஷின் லிட்டன் தாஸ் தடுத்து ஆட, அவரிடம் சென்று சிராஜ் ஏதோ வார்த்தைகளை கூறினார். அடுத்த பந்தை வீச சிராஜ் தனது ரன்-அப்பை நோக்கிச் சென்றபோது லிட்டன் அவரிடம் ஏதோ பதில் கூற சண்டை செய்வது போல முன்னே செல்ல, பின்னர் அது நடுவரால் தடுத்து நிறுத்தப்பட்டது. சிராஜ் அடுத்த பந்திலேயே லிட்டனை வெளியேற்றினார். அந்த விக்கெட்டை விராட் கோலியும், சிராஜும் கொண்டாடி தீர்த்தனர். அப்போது லிட்டன் செய்தது போல சைகை செய்த விராட் கோலியின் புகைப்படங்கள் வைரல் ஆகின.
என்ன கூறினார் சிராஜ்?
இது நடப்பதற்கு முன் சிராஜ் அவரிடம் பேசியது குறித்து கூறுகையில் "எதுவும் இல்லை, 'இது டி20 அல்ல, இது டெஸ்ட் கிரிக்கெட். புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடு'ன்னு சொன்னேன்", என்றார். வங்காளதேசம் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 133/8 என்று முடிக்க, இன்று காலை மீண்டும் போட்டி துவங்கியதும் 17 ரன்களில் மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் விட்டு 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்றோடு சேர்த்து இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. குல்தீப் யாதவ் மூன்றாவது நாளின் தொடக்கத்தில், சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி வெறும் 8 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள அவர் இந்தியா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய அணி தொடக்க வீரர்களாக கில் மற்றும் ராகுல் இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கி நிதானமாக விளையாடி வருகின்றனர்.