முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் ரசிகர் படை வானளவு உயர்ந்திருக்கிறது என்றால் மிகையாகாது. இந்த ஐபிஎல் தொடரில் கூட அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தால் ஈர்கப்பட்டவர்கள் பலர். அவர் இல்லாத மைதனாங்களிலும் அவர் பெயர் சொல்ல வைத்ததுதான் ஸ்பெஷல். தற்போது இந்த பேட்டிங் ஜாம்பவான் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை அடைந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


விராட் கோலி


இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் கால்பந்து ஐகான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு பின்னால் அவர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஸ்டாகிராம் பின்தொர்பவர்கள் பட்டியலில் கிரிக்கெட் என்று பார்க்கும்போது விராட் கோலி ஒருவர் மட்டுமே தனித்து அந்த பட்டியலில் பல மைல் தூரம் முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக இருக்கும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.



தோனி & சச்சின்


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐகானுமான எம்.எஸ். தோனி, தனது கேப்டன்சியின்போது இந்திய அணியை உலகக்கோப்பை என்ற உச்சத்திற்கே கொண்டு சென்றவர். டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற அவர், இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 42.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். உலகின் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் (40.5M) பட்டியலில் தோனிக்கு அடுத்தபடியாக உள்ளார், தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (28.5M) மற்றும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (25.9M) ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!


அடுத்தடுத்த இடங்கள்


இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் நட்சத்திரமும், சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரும் ஆன மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னா (23.8 மீ) பட்டியலில் ஆறாவது இடத்தையும், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் (21.9 மி) ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளனர். முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரும், 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை ஹீரோவும் ஆன யுவராஜ் சிங் (17.5 மீ) ஏழாவது இடத்தில் உள்ளார். கே.எல் ராகுல் (14.2 மீ) மற்றும் மூத்த இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் (13.7 மீ) ஆகியோர் இந்தப் பட்டியலின் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர்.



உலகளவில் கோலி டாப் 10


ஒட்டுமொத்தமாக பார்த்தால், இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் முதல் 20 நபர்களின் பட்டியலில் விராட் கோலி மட்டுமே ஒரே இந்தியர் ஆவார். அவர் தற்போது மியூசிக் ஐகான் டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு பின்னால் 15 வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (86.7M) 42வது இடத்திலும், ஷ்ரத்தா கபூர் (80.2M) 44வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலியை தவிர இந்த பட்டியலில் டாப் 50 இல் இருக்கும் இந்தியர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.