KL Rahul Covid Positive: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் உடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவிருந்த நிலையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐயுன் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் அவ்வபோது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். குறிப்பாக இந்தாண்டில் மட்டும் மூன்று முறை காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
குறிப்பாக, இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த போதும் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகினார். இவர் அடிக்கடி காயம் காரணமாக விலகுவதால், முழு பிட்னஸுக்காக பிசிசிஐ சார்பாக ஜெர்மனிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து தந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், “கடந்த 2 வாரங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. தற்போது காயம் குணமாகி உடல்நிலை மேம்பட்டு வருகிறது. முழு உடற்தகுதியை மீட்கும் பயணத்தை இன்று முதல் துவங்கியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகள்” எனத் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து தொடரினை மிஸ் செய்த ராகுல், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற உடற் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் இந்த தொடர் முழுவதும் இவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இது கே.எல். ராகுலுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் எப்போதும் கலக்கி வரும் கே.எல். ராகுலுக்கு காயம் மற்றும் தொற்று பாதிப்பு பெரும் மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது. இவர் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் 7 சதம், 13 அரை சதம் உட்பட 2,457 ரன்களும், 42 ஒருநாள் போட்டிகளில் ஐந்து சதம் உட்பட 1,634 ரன்களும் அடித்துள்ளார். 56 சர்வதேச டி-20 போட்டிகளில் இரண்டு சதம் உட்பட 1,831 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்