கே.எல் ராகுலுக்கு தகுதியின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என, இந்திய அணியின் தமிழக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். 


பாரபட்சத்தால் வாய்ப்பு:


அதில், ”ராகுலின் விளையாட்டு திறன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. 8 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் ராகுல், 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகும் சராசரி ரன் விகிதமாக வெறும் 34 ஆக வைத்திருப்பது வெறும் சாதாரணமான விஷயம்.  இதுபோன்று பல்வேறு வாய்ப்புகளை பெற்ற வேறு எந்தவொரு வீரரையும் என்னால் கூறமுடியவில்லை. குறிப்பாக தொடர்ந்து யாருக்கும் இதுபோன்று வாய்ப்புகள் கிடைக்கவில்லை.






இளைஞர்கள் காத்திருக்கின்றனர்..


ஆசைகளுடனும்,  நல்ல ஃபார்முடனும் பல இளம் வீரர்கள் காத்திருக்கின்றனர்.  சுப்மன் கில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார், சர்ஃபராஸ் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சதங்களை விளாசி வருகிறார். இதேபோன்று தகுதியான பலர்  ராகுலுக்கு பதிலான வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். சிலருக்கு வெற்றிபெறும் வரை முடிவில்லாமல் வாய்ப்புகள் வழங்கப்படுவது அதிர்ஷ்டம். ஆனால் சிலருக்கு வாய்ப்புகளே கிடைப்பதில்லை.


எதுவரை வாய்ப்பு?


இதிலும் மோசமான விஷயம் என்னவென்றால், டெஸ்ட் போட்டிகளில் கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வினுக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அவர் துணை கேப்டனாக இருக்க வேண்டும். இல்லை என்றால் புஜாரா அல்லது ஜடேஜாவை நியமிக்கலாம். டெஸ்டில் ராகுலை விட மயங்க் அகர்வால் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். விஹாரியும் அப்படித்தான்.


ராகுல் அணிக்கு தேர்வு செய்யப்படுவது என்பது செயல்பாடு என்பதன் அடிப்படையில் அல்லாமல் பாரபட்சத்தின் அடிப்படையில் உள்ளது. அவர் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளார். 8 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடும் அவர் தனது திறமையை செயல்பாடாக மாற்றாமல் இருக்கிறார்” என வெங்கடேஷ் பிரசாத் கடுமையாக சாடியுள்ளார்.


கபில்தேவ் விமர்சனம்:


முன்னதாக, கே.எல். ராகுல் மிகவும் இயற்கையான வீரர் நானும் அவரை மிகவும் விரும்புகிறேன். ஆனால் தற்சமயத்தில் அவர் அணிக்கு பொருந்தவில்லை என்றால் அவரை விட்டு விடுங்கள் என, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


தொடர்ந்து சொதப்பும் கே.எல்.ராகுல்:


இந்திய அணியின் முன்னணி வீரர்களாக இருந்த கே. எல். ராகுல், அனைத்து விதமான கிரிக்கெட்டுகளிலும் சதம் அடித்த வீரர்களில் ஒருவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். ஆனால், கடந்த ஆண்டு ஜனவரிக்குப் பின் அவரது ஆட்டம் மோசமான நிலையில் உள்ளது. 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு, கே.எல். ராகுலின் மோசமான ஃபார்மும் முக்கியமான காரணமாக அமைந்தது. இந்நிலையில் தான் அஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கே. எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டதும் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, முதல் டெஸ்ட் போட்டியில் அவர் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் வெறும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து, தற்போது பலரும் கேல்.எல். ராகுலை விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து, வரும் 17ம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.