தற்போதுள்ள இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படுபவர் கே.எல். ராகுல். அணியின் துணை கேப்டனாக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, மோசமாக விளையாடி வந்தாலும் அணியில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
மோசமான ஆட்டம்:
தொடக்க காலத்தில், சிறப்பாக விளையாடிய போதிலும், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார். 47 இன்னிங்ஸில் 1,203 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கே.எல். ராகுல். அவரின் சராசரி 26.15 ரன்களாகும்.
குறிப்பாக, கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு முறை மட்டுமே 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கூட, சுமார் ஆட்டத்தையே ஆடி வந்துள்ளார். நிலைமை இப்படியிருக்க, இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது ஏன் என ரசிகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முரளி விஜய், ஷிகர் தவானுக்கு கொடுக்கப்படாத வாய்ப்பு:
முரளி விஜய், ஷிகர் தவான் போன்ற வீரர்களும், தொடக்க காலத்தில் சிறப்பாக விளையாடியபோதிலும், பின்னர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அணியில் இருந்த நீக்கப்பட்டனர். ஆனால், முரளி விஜய், ஷிகர் தவானுக்கு கொடுக்கப்படாத வாய்ப்பு கே.எல். ராகுலுக்கு மட்டும் கொடுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.
இதையடுத்து, கே.எல்.ராகுலின் ஃபார்ம் குறித்து கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத். குறிப்பாக, அணி நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறியுள்ளார்.
"கடந்த 20 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் இவ்வளவு குறைவான சராசரியை வைத்து கொண்டு வேறு யாரும் இவ்வளவு அதிகமான போட்டிகளில் விளையாடியதில்லை. அவரை அணியில் சேர்ப்பதன் மூலம் திறமையான ஃபார்மில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
ஷிகர் தவானின் டெஸ்ட் சராசரி 40 ரன்களுக்கு மேல். இரண்டு இரட்டை சதத்தை அடித்த மயங்க் அகர்வாலின் சராசரி 41 ரன்களுக்கு மேல். பயங்கரமான ஃபார்மில் உள்ளார் சுப்மன் கில். வாய்ப்புக்காக தொடர்ந்து காத்து கொண்டிருக்கிறார் சர்பராஸ் கான். உள்ளூர் ஆட்டத்தில் சிறப்பான விளையாடிய போதிலும் அவை புறக்கணிக்கப்படுகிறது.
கொந்தளித்த வெங்கடேஷ் பிரசாத்:
ராகுலை அணியில் சேர்ப்பது நீதியின் மீதான நம்பிக்கையை அசைக்கிறது. சிறந்த திறனைக் கொண்டிருந்த எஸ்.எஸ்.தாஸ், எஸ். ரமேஷ் இருவரும் சராசரியாக 38 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர். ஆனால், 3 டெஸ்ட் போட்டிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ராகுலை தொடர்ந்து அணியில் சேர்ப்பது இந்தியாவில் பேட்டிங் திறமை இல்லாதது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இது உண்மையல்ல. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சராசரி 47 இன்னிங்ஸில் 27க்கு கீழே உள்ளது.
என்னைப் பொறுத்தவரை, அவர் தற்போது இந்தியாவின் 10 சிறந்த தொடக்க வீரர்களில் இல்லை. ஆனால், முடிவில்லாத வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் ஆட்ட நாயகனுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சூழலுக்கு ஏற்றார்போல் வீரர்களை எடுக்கிறோம் என கூறி அடுத்த ஆட்டத்தில் அவர் நீக்கப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.