இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் நேற்று கேரளாவின் திருவனந்தபுரம் சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அத்துடன் பலரும் அந்த மாநிலத்தின் உள்ளூர் நாயகனான சஞ்சு சாம்சன் எங்கே என்று கேட்டு ஒலி எழுப்பினர். ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் வீரர்களை பார்த்து சஞ்சு சஞ்சு என்று குரல் எழுப்பியுள்ளனர். இதற்கு இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய மொபைல் போனில் சஞ்சு சாம்சன் படத்தை காட்டியுள்ளார். அவர் அங்கே இருப்பதாக ரசிகர்களை பார்த்து அவர் கூறும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அதேபோல் தீபக் சாஹர், சூர்யகுமார், விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் நடந்து வரும் போது ரசிகர்கள் வெளியே இருந்து சஞ்சு சாம்சன் பெயரை கத்தி வந்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த இரண்டு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இதற்கிடையே இன்று இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 284 ரன்கள் குவித்தது. அதில் கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் விளாசி அசத்தினார். அவர் களத்திற்கு வந்தவுடன் சென்னை சேப்பாக்கத்தில் இருந்த ரசிகர்கள் சஞ்சு சஞ்சு என்று அவருக்கு அதிகமான ஆரவாரம் செய்தனர்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டவுடன் அதில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இது தொடர்பாக அப்போது ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக களமிறங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தொடரில் இந்திய ஏ அணியில் இடம்பிடித்த சில வீரர்கள் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.