கேசிசி 2023 என்ற கன்னட சலனசித்ரா கோப்பை தொடர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்  கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த தொடர் தொடங்கிய நிலையில், முதல் நாளில் மூன்று போட்டிகள் நடத்தப்பட்டனர். இந்த போட்டியில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 


இந்த கேசிசி 2023 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் நடிகர் புனித் ராஜ்குமாரின் புகைப்படம் வைக்கப்பட்டு  சாண்டல்வுட் திரையுலகினர் அவருக்கு சிறப்பு மரியாதை செலுத்தினர். 


இந்த தொடரில் கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, பிரையன் லாரா, திலகரத்ன டில்ஷான், ஹெர்ஷல் கிப்ஸ், சுப்ரமணியம் பத்ரிநாத் போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.


கடம்ப சிங்கங்கள், ராஷ்டிரகூட பாந்தர்ஸ், விஜயநகர் தேசபக்தர்கள், கங்கா வாரியர்ஸ், ஹொய்சாள கழுகுகள் மற்றும் வாடியார் சார்ஜர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற நிலையில், போட்டியை முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 


லீக் சுற்றின் முடிவில் கேசிசி 2023 தொடரில் கங்கா வாரியர்ஸ் அணியும், விஜயநகர் பேட்ரியாட்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் கங்கா அணிக்காக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா முக்கிய பங்கு வகித்தார். இறுதிப் போட்டியில், பேட்டிங்கில் 54*(29), பந்துடன் : 1-0-3-2, 2 கேட்சுகள், 1 ரன்அவுட் மற்றும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.


பட்டத்தை வென்ற பிறகு தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட சுரேஷ் ரெய்னா, ”"சின்னசாமி மைதானத்தில் மீண்டும் விளையாடியது, பல நினைவுகளைத் திரும்பக் கொண்டுவருகிறது. நன்றி” என பதிவிட்டிருந்தார். 






இந்தநிலையில், விஜயநகர் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா டைவ் அடித்து கேட்ச் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது. 


சாண்டல்வுட் நட்சத்திரங்கள் மற்றும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்களை அழைந்து வந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப் 2 நாள் டி10 போட்டிகள் கொண்ட தொடரை நடத்தி வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.