நியூசிலாந்து அணிக்காக ஒட்டுமொத்தமாக 10 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய வீரர் ஆன இவர் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே விளையாடினார். இவர் 1999 உலகக் கோப்பையில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்காகவும், மிக நீண்ட ஆட்டம் ஆடி டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனைக்காகவும் அறியப்பட்ட இவர் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெஃப் அலாட் எனும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் 1971ல் டிசம்பர் 24ம் தேதி பிறந்துள்ளார்.
இவர் மிகக் குறுகிய டெஸ்ட் வாழ்க்கையை கொண்ட வீரராக அறியப்படுகிறார். ஜனவரி 1996 இல் ஹாமில்டனில் ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்திற்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதில் 19 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாக செயல்பட்டார் அலோட். மூன்று வருடம் மட்டுமே அவர் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடினார். அதனிடயில் தான் 1999 உலகக்கோப்பை வந்தது. 1999 உலகக் கோப்பையில் மட்டும், அவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இது ஒரு உலகளாவிய போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற சாதனையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அதே உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா ஃபைனல் சென்றதால் ஷேன் வார்னே ஒரு கூடுதல் ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் அவரது சாதனையை சமன் படுத்தினார்.
தென்னாப்பிரிக்காவின் நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்தில் ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் 1998-99 இல் ஃபாலோ-ஆனைத் தவிர்க்க நியூசிலாந்து அணிக்கு 102 ரன்கள் தேவைப்பட்டது. அலாட் 11வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார், மேலும் கிறிஸ் ஹாரிஸுடன் கூட்டணி சேர்ந்து இருவரும் 32 ரன்கள் எடுத்தனர். சுவாரஸ்யமாக, அலோட் ஒரு ரன் கூட எடுக்கவில்லை, 101 நிமிடங்கள் களத்தில் இருந்தார், மேலும் 77 பந்துகளை எதிர்கொண்டார். நீண்ட நேரம் களத்தில் நின்று அதிக பந்துகள் பிடித்து டக் அவுட் ஆன சாதனை இவரை சேர்ந்தது. காட்ஃப்ரே எவன்ஸின் சாதனையை அலாட் முறியடித்தபோது, அதே போட்டியில் டேரில் கல்லினன் 275 ரன்களை எடுத்தபோது பெற்ற வரவேற்பை விட உற்சாகம் அதிகமாக இருந்ததாக கூறுவார்கள்.
இவர பந்து வீசுவதில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் உண்டு. பந்தை டெலிவரி செய்யும் போது அவரது முன் பாதத்தில் அதிக அழுத்தத்தை வெளியிட, அலாட் ஷூ போட மாட்டார். அதற்கு பதிலாக இரண்டு ஜோடி காலுறைகளை அணிந்திருந்தார். இது பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் காட்சியாக இருந்தது, அவரது பவுலிங்கை எதிர்கொள்பவர்களுக்கு குழப்பமான ஒன்றாக இருந்தது. இடது கை பந்துவீச்சாளரான இவர் முதுகில் இருந்த முறிவுகள் எப்பொழுதும் தொந்தரவாக இருந்தன, மேலும் ரிச்சர்ட் ஹாட்லீயுடன் தீவிரமாக உழைத்த பின்னரே 1999 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் அவர் அந்த சாதனையை அடைய முடிந்தது.
ஆனால் 2000 ஆம் ஆண்டு வந்தபோது, அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த உடல் தகுதியை வைத்துக்கொண்டு அவரால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடமுடியாமல் போனது. 1998 இல், கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக அலாட் வங்கி வேலையை விட்டுவிட்டார், ஆனால் பலவீனமான முதுகு மற்றும் இடுப்பு கிரிக்கெட்டுக்கு தடையாக இருந்த காரணத்தால் மார்ச் 2001 இல் ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. மார்ச் 2001 இல் கிரிக்கெட்டிலிருந்து விலகிய பிறகு, அலாட் வங்கி மற்றும் நிதித்துறையில் ஒரு தொழிலைத் தொடங்கினார். 2008 இன் பிற்பகுதியில் மீண்டும் கிரிக்கெட் அவரை அழைத்தது, நியூசிலாந்து கிரிக்கெட்டின் (NZC) பொது மேலாளராக அலோட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து அணி தங்கள் கிரிக்கெட் அமைப்பை மாற்றி அமைத்து அதிக வெற்றியை பெற எதிர்பார்த்ததால் இந்த நிலை உருவாக்கப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்து வந்த பங்களாதேஷ் தொடர் அதற்கும் முடிவாக அமைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, இரண்டாவது ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது. சுற்றுப்பயணத்தின் முடிவில் அலாட் தனது பதவியில் இருந்து விலகினார். இப்படி கிரிக்கெட்டில் எதை தொட்டாலும் குறுகிய காலமே அவருக்கு வாய்த்தது. ஆனாலும் அதில் பெயர் சொல்ல தக்க சாதனைகளை கைவசம் எடுத்துக்கொண்டுள்ளார்.