இந்தியாவில் கடந்த சில காலங்களாக மகளிர் கிரிக்கெட் அணி அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. மிதாலிராஜ், ஸ்மிரிதி மந்தனா, கர்மன்பிரீத்கவுர் என்று பல வீராங்கனைகளும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களைப் போல ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயம். இந்த நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக நீண்டகாலம் இந்திய அணிக்காக ஆடிய வீராங்கனை ஜூலன்கோஸ்வாமிக்கு இன்று 39-வது பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




இந்திய மகளிர் தேசிய அணிக்காக மட்டுமின்றி ஆசிய மகளிர் அணி, பெங்கால் மகளிர் அணி, கிழக்கு மண்டல மகளிர் அணி, இந்திய பச்சை அணி, மகளிர் டி20 அணியான ட்ரெயில்ப்ளேசர்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். சிறந்த வேகப்பந்துவீச்சாளரான கோஸ்வாமி பல நெருக்கடியான நேரத்தில் இந்திய அணிக்காக கடைசிகட்டத்தில் அதிரடியான பேட்டிங்கையும் வெற்றி பெற்றுள்ளார்.


கோஸ்வாமி 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சாக 25 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 78 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  2 முறை 4 விக்கெட்டுகளையும், 3 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.




192 ஒருநாள் போட்டிகளில் ஆடி 240 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சாக 31 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 68 டி20 போட்டிகளை இந்திய அணிக்காக ஆடி 56 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், அதிகபட்சமாக 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


டெஸ்ட் போட்டிகளில் 291 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 1,162 ரன்களையும், டி20 போட்டிகளில் 405 ரன்களையும் அடித்துள்ளார். இவற்றில் ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ரன்னாக 65 ரன்களை அடித்துள்ளார்.




மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 19 ஆண்டுகள் 262 நாட்கள் ஆடி அதிகநாட்கள் மகளிர் கிரிக்கெட் ஆடிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த வயதிலே 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.


மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை மெய்டன் ஓவர்கள் வீசிய வீராங்கனை என்ற பட்டியலில் 14 ஓவர்களுடன் 3வது இடத்தில் உள்ளார். மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபேரை போல்டாக்கிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 26 பேருடன் 6வது இடத்தில் உள்ளார்.