ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ஜெய்தேவ் உனத்கட் படைத்துள்ளார். 


சௌராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட், ரஞ்சி கோப்பை போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாறு படைத்துள்ளார். 


வங்காளதேசத்திற்கு எதிராக கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை அளித்தார். அதை தொடர்ந்து, தற்போது ரஞ்சி டிராபி போட்டியில் சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக களமிறங்கினார். 


இந்திய அணிக்காக உனத்கட் விளையாட சென்றதால் இந்த ரஞ்சி டிராபியின் சவுராஷ்டிரா அணிக்காக முதல் இரண்டு போட்டிகளை தவறவிட்டார். இருப்பினும், டெல்லி அணிக்காக களமிறங்கிய உனத்கட், தான் வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். மேலும், முதல் இன்னிங்ஸில் டெல்லிக்கு எதிராக 39 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 8 விக்கெட்களையும் அள்ளினார். 


சவுராஷ்டிரா அணிக்கு எதிரான டெல்லி அணி கேப்டன் யாஷ் துல் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக துருவ் ஷோரே மற்றும் ஆயுஷ் பதோனி களம் இறங்கினார். ஆட்டத்தின் முதல் ஓவரில் சவுராஷ்டிரா அணியின் கேப்டன் உனத்கட் வீசினார். 


உனத்கட் வீசிய முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகள் ரன் எதுவும் இல்லை. தொடர்ந்து, 4வது பந்தில் துருவ் போல்ட் முறையில் உனத்கட் வெளியேற்ற, அடுத்த பந்து ராவல் களம் புகுந்து ஹார்விக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 






அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழுந்ததை தொடர்ந்து, டெல்லி அணியை மீட்க கேப்டன் யாஷ் துல் களமிறங்கினார். அவரையும் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் உனத்கட் வெளியேற்றி ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் 88 ஆண்டுகால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்திய வீரரானார். 


இதற்கு முன்னதாக கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், மும்பைக்கு எதிராக கடந்த 2017-18 காலிறுதியில் தனது ஹாட்ரிக்கை முதல் மற்றும் மூன்றாவது ஓவர்களில் நிகழ்த்தினார். மும்பைக்கு எதிரான முதல் ஓவரின் கடைசி பந்தில் வினய் குமார் முதல் விக்கெட்டை எடுத்தார். அதனை தொடர்ந்து வினய் குமார், தனது மூன்றாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 


தொடர்ந்து, தனது இரண்டாவது ஓவரை வீசிய உனத்கட், மேலும் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து முதல்தர கிரிக்கெட்டில் தனது 21வது ஐந்து விக்கெட்களை பெற்றார். தொடர்ச்சியாக உனத்கட் டெல்லிக்கு எதிராக சிறப்பாக விளையாடி விக்கெட்களை வீழ்த்த, தனது 98 முதல்தர போட்டிகளில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


சவுராஷ்டிரா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டி முக்கியமானதாகும். மூன்று போட்டிகள் விளையாடியுள்ள சவுராஷ்டிரா தற்போது ஒரு வெற்றி, இரண்டு டிராகளுடன் 12 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பையும், மகாராஷ்டிராவும் தற்போது முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர். 


உனத்கட் இதுவரை இந்தியாவுக்காக ஏழு ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த மாதம் நடந்த விஜய் ஹசாரே டிராபியில் சவுராஷ்டிரா கேப்டன் உனத்கட் அதிக விக்கெட் வீழ்த்தியவர். அவர் அந்த தொடரில் 10 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உனத்கட் இதுவரை 96 முதல் தர போட்டிகளில் விளையாடி 353 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.