இந்தியா- இலங்கை எதிரான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், இந்திய அணி தற்போது பேட்டிங் ஆடி வருகிறது.
இன்றைய டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகினர். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு பிறகு, டி20 வடிவத்தில் 100வது வீரரை அறிமுகம் செய்த இரண்டாவது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
டி20 இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி 100வது வீரராகவும், சுப்மன் கில் 101வது வீரராகவும் அறிமுகமானர். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் வழக்கமாக களமிறங்கும் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெறாததால், அவர்களுக்கு பதிலாக இந்த இரண்டு பேரும் அறிமுகமாகியுள்ளனர்.
கில் ஏற்கனவே இந்தியா அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், மாவிக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும். கில் மற்றும் மாவி இருவரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் இதுவரை 1900 ரன்களும், மாவி 32 போட்டிகளில் 30 விக்கெட்களை எடுத்துள்ளனர்.
இலங்கை அணி டாஸ் வெல்லவதற்கு முன்னதாக மாவிக்கு கேப்டன் ஹர்திக்கும், துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் கில்லுக்கு தொப்பி வழங்கினர். இடது கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு இன்னும் உடல்நிலை சரியில்லாததால், அதை மாவி நிரப்புவார் என டாஸ் நிகழ்வின்போது ஹர்திக் தெரிவித்தார்.
2018 U-19 உலகக் கோப்பைக்கு பிறகு மாவி இந்திய அணியின் தனது இடத்தை பிடிக்க கடினமாக போராடினார். அதேபோல், கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு சிறப்பாக அமைந்தது. சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டியில் 10 விக்கெட்டுகளையும், விஜய் ஹசாரே டிராபியில் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
இந்திய அணி விவரம்:
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்
இலங்கை அணி விவரம்:
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க