Jasprit Bumrah: சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்ப்ரித் பும்ரா விலகல்
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, அடுத்த வாரம் துபாயில் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாதது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதிலும், முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை பும்ரா வென்றது குறிப்பிடத்தக்கது.
அணியில் வருண் சக்ரவர்த்தி:
முன்னதாக சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்காக, 15 வீரர்கள் அடங்கிய உத்தேச அணியை பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதில் ஜஸ்ப்ரித் பும்ராவின் பெயரும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் அவரது விலகலுக்குப் பிறகு வெளியாகியுள்ள வீரர்களுக்கான அறிவிப்பில், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியும் அணியில் இடம்பெற்றுள்ளார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று வீரர் அறிவிப்பு
பும்ரா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதை அடுத்து, சாம்பியன்ஸ் ட்ராபியில் அவருக்கான மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை பிசிசிஐ அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான், அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அதோடு, போட்டிக்கான முதல் 15 வீரர்களின் பட்டியலில் யஷஷ்வி ஜெய்ஷ்வாலுக்கு பதிலாக, தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி அணியில் இணைந்துள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (WK), ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் யா சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி.
மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே. மூன்று வீரர்களும் தேவைப்படும்போது துபாய்க்கு பயணம் செய்வார்கள்.
சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி
பாகிஸ்தான் நடத்த உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி, வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள்மட்டும் துபாயில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி நடைபெற உள்ள தங்களது முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்த எதிர்கொள்கிறது.