இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி:


மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. அதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, மூத்த வீரர் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.


இந்திய அணி முதலில் பேட்டிங்:


போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய  இந்திய அணிக்கு, இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், 34 ரன்கள் சேர்த்து இருந்தபோது சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷனும் 55 ரன்களை சேர்த்து இருந்தபோது பெவிலியன் திரும்பினார்.


சரிந்த விக்கெட்டுகள்:


இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  இதனால் 113 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்பு மீண்டும் போட்டி தொடங்கப்பட, 40.5 ஓவர்களுக்கு எல்லாம் வெறும் 181 ரன்களை மட்டுமே சேர்த்து இந்திய அணி ஆல்-அவுட் ஆனது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், மோதி மற்றும் ஷெபர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


மேற்கிந்திய தீவுகள் அணி அபாரம்:


எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி விரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ்அதனாசே மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து, 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சாய் ஹோப் மற்றும் கார்டி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி:


இந்த கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி 36.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி போட்டியில் வெற்றி பெற்றது. நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹோப் 80 பந்துகளில் 63 ரன்களையும், கார்டி 65 பந்துகளில் 48 ரன்களையும் குவித்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டிற்கு 91 ரன்களை குவித்தது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலை அடைந்துள்ளது. அதோடு, தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 9 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று வந்த அணி முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.  இதையடுத்து, தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி செவ்வாயன்று இந்திய நேரப்படி மாலை 7மணிக்கு தொடங்க உள்ளது.