இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மத்திய ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளனர். பிசிசிஐ புதிய மத்திய ஒப்பந்தத்தை நேற்று (பிப்ரவரி 28) வெளியிட்டது. இதையடுத்து, மத்திய ஒப்பந்தம் முடிந்த பிறகு இஷான் கிஷானும், ஷ்ரேயாஸ் ஐயரும் இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக வெளியேறுகிறார்களா என்ற கேள்வி இப்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 


மத்திய ஒப்பந்தத்தில் இணையும் வீரர்களுக்கு பிசிசிஐ ஆண்டுதோறும் நிலையான சம்பளத்தை வழங்குகிறது. இது தவிர போட்டிக்கு ஏற்ப கட்டணம் பெறுகின்றனர். ஆனால், ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத வீரர்களுக்கு போட்டி கட்டணம் மட்டுமே வழங்கப்படும். இப்படியான சூழ்நிலையில், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்.. 


இஷான் கிஷன்: 


இந்த முழு சர்ச்சையும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து தொடங்கியது. இஷான் கிஷன் மனநலம் காரணமாக இந்திய அணியில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்றார். இதன் பிறகு இங்கிலாந்து தொடருக்கான அணியில் இஷான் கிஷானுக்கு இடம் கிடைக்கவில்லை. இஷான் கிஷனை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்,  இந்திய அணியில் மீண்டும் வருவதற்கு கிஷன் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தெளிவுபடுத்தினார். ஆனால் இது இருந்தபோதிலும், இஷான் கிஷன் தொடர்ந்து ரஞ்சி டிராபியில் இருந்து விலகி இருந்தார். மேலும், ஜார்கண்ட் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடாமல், ஐபிஎல் சீசன் 17க்காக பயிற்சி மேற்கொண்டதாக செய்திகள் பரவியது. 


ஷ்ரேயாஸ் ஐயர்: 


இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது ஷ்ரேயாஸ் ஐயரும் சர்ச்சையில் சிக்கினார். ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். ஆனால் இரண்டு டெஸ்ட்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பையையும் புறக்கணித்தார். இது மட்டுமின்றி, ரஞ்சி டிராபியில் விளையாடாததற்கு காயத்தை சாக்குப்போக்கு செய்தார். ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமி ஷ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபியில் விளையாடுவதற்கு முற்றிலும் தகுதியானவர் என்று தெளிவுபடுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதியில் மும்பை அணிக்காக விளையாடபோவதாக அறிவித்தார். 


உள்நாட்டு கிரிக்கெட்டை புறக்கணிக்கும் எந்த வீரரும் எதிர்காலத்தில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற அதிரடி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிசிசிஐ சொல்லாமல் எச்சரித்துள்ளது. 


மத்திய ஒப்பந்தம் இல்லாமல் விளையாடும் வீரர்கள்: 


மத்திய ஒப்பந்தம் இல்லாமல் கூட  இந்திய அணிக்காக விளையாடும் பல வீரர்கள் உள்ளனர். இப்போது கடந்த ஆண்டு, அஜிங்க்யா ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டார். இருப்பினும் ரஹானே மத்திய ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில், மத்திய ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்பது தெளிவாகிறது.