இந்திய அணி ஒருநாள், டி20 என உலகக் கோப்பைகளை வென்றிருந்தாலும் டெஸ்ட் வடிவத்தில் கடந்த 25 ஆண்டுகளில் அசாத்திய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றே கூறலாம். வருகின்ற மார்ச் 7ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் இந்திய அணி புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது. தர்மசாலாவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 178வது வெற்றியாக இது அமையும். மேலும், இந்திய அணி தனது 578வது டெஸ்ட் போட்டியை தர்மசாலாவில் விளையாட தயாராகி வருகிறது.
2000ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி முதல் 200 வரையிலான டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான சாதனையே வைத்திருந்தது. இந்திய அணி முதல் 200 டெஸ்ட் போட்டிகளில் 112 தோல்விகளை சந்தித்துள்ளது. அதன்படி, 2000 ஆம் ஆண்டு வரை இந்திய அணி 61 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் அதன்பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தற்போது இந்திய அணி 177 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றும், 178 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 222 போட்டிகளில் எந்த முடிவும் இல்லை. இந்தநிலையில், கடந்த 25 ஆண்டுகளில் இந்திய அணி எப்படி டெஸ்ட் போட்டிகலில் அபரிமிதமான முன்னேற்றை தொட்டுள்ளது என்பதை இங்கே காணலாம்..
12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் இந்திய அணி ஆதிக்கம்:
கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி எந்த தொடரையும் இழந்ததில்லை. இந்திய மண்ணில் இந்திய அணி கடைசியாக கடந்த 2012ல் இங்கிலாந்திடம் டெஸ்டில் தோல்வியை சந்தித்தது. இதற்கு பிறகு இந்திய அணி இன்னும் சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்கவில்லை. இந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியை கூட இந்திய அணி இரண்டு முறை சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, முகமது ஷமி மற்றும் கே.எல்.ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத போதிலும், இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, அதன் பிறகு தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றது. தர்மசாலா டெஸ்ட் போட்டிக்கு முன்பே, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கேப்டன்களின் அதிக வெற்றிகள்:
1) விராட் கோலி - 40
2) எம்எஸ் தோனி - 27
3) சவுரவ் கங்குலி - 21
4) எம் அசாருதீன் - 14
5) ரோஹித் சர்மா - 9*