தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடர் தோல்வி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி ரொம்பபே மோசமாக ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளையுமே இந்தியா தோற்றது. 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இதில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். 




இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் இளம் வீரர்கள் சிலர் சீரற்றும் பொறுப்பற்றும் ஆடுவதே மிக முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை இந்த தொடரில் மட்டுமில்லை. சமீபகாலமாகவே இந்திய அணியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கும் இளம் வீரர்கள் கடுமையாக சொதப்பிக் கொண்டேதான் இருக்கின்றனர். இந்திய அணி இப்போது ஒரு 'Transition Period' இல் இருக்கிறது.


அதாவது, ரோஹித், விராட் கோலி போன்ற மூத்த வீரர்களின் கையிலிருந்து அடுத்த தலைமுறை வீரர்களை நோக்கி இந்திய அணி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் இந்திய அணியின் வருங்காலமாக பார்க்கப்படும் இளம் வீரர்கள் தங்களையே ஸ்திரப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. ருத்துராஜ் கெய்க்வாட் 2021 ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்திருந்தார்.




அவரின் பங்களிப்பை கழித்துவிட்டு பார்த்தால் சென்னை அணி அந்த சீசனில் சாம்பியன் ஆகியிருக்குமா என்பதே சந்தேகம்தான். இளம் வீரராக முழுமையாக ஆடிய முதல் ஐபிஎல் சீசனிலேயே ருத்துராஜ் கெய்க்வாட் அதிக ரன்களை அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். இதனை தொடர்ந்து அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக தொடங்கியது. இவரை இந்திய அணியில் எடுத்தே ஆக வேண்டும் என ரசிகர்களும் தங்களின் முழு ஆதரவை அவருக்கு அளித்திருந்தனர்.


அணியில் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பே வழங்கப்படாமல் பென்ச்சில் உட்கார வைத்திருந்த போதும் இவரை ஏன் ப்ளேயிங் லெவனில் எடுக்க மறுக்கிறீர்கள்? என பிசிசிஐயும் இந்திய அணி நிர்வாகத்தையும் கடுமையாக சாடியிருந்தனர். கிட்டத்தட்ட ருத்துராஜ் கெய்க்வாட் இல்லாத இந்திய அணியை ரசிகர்கள் ஏற்கும் மனநிலையிலேயே இல்லை என்கிற சூழல்தான் நிலவியது.




இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் ஆதரவுகளுக்கும் மத்தியில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் ருத்துராஜ் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. இப்போது நடந்துக் கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க தொடரிலுமே முதல் போட்டியில் 23 ரன்களையும் இரண்டாவது போட்டியில் வெறும் 1 ரன்னையும் மட்டுமே ருத்துராஜ் எடுத்திருக்கிறார்.  சென்னை அணிக்குமே 2021 சீசனில் ஆடியதை போல பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2022 சீசனில் ஆடியிருக்கவில்லை. ரொம்பவே சுமாராகத்தான் ஆடியிருந்தார்.


அதேமாதிரிதான் வெங்கடேஷ் ஐயரும். 2021 சீசனின் இரண்டாம் பாதியில்தான் கொல்கத்தா அணிக்கு ஓப்பனராக அறிமுகமாகியிருந்தார். அந்த சீசனின் முதல் பாதியில் கொல்கத்தா ரொம்பவே மோசமாக ஆடியிருந்தது. ஆனாலும் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்த தொடர் வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இந்த திடீர் விஸ்வரூபத்திற்கு காரணமாக அமைந்தவர் வெங்கடேஷ் ஐயர் தான்.


ஓப்பனிங்கில் அவர் காட்டிய அதிரடிதான் அணியின் தலையெழுத்தையே மாற்றியது. ருத்துராஜ் மீது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ அதே எதிர்பார்ப்பு இவர் மீதும் இருந்தது. இந்திய அணியில் ருத்துராஜை விட அதிக வாய்ப்புகளை பெற்றும் வெங்கடேஷ் ஐயர் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் சீசனிலும் கொல்கத்தா அணிக்கு ஏமாற்றமளிக்கும் வகையிலேயே ஆடியிருந்தார். கொல்கத்தா அணி இவரை ப்ளேயிங் லெவனிலிருந்து ட்ராப்பே செய்திருந்தது.




இவர்களையெல்லாம் விட முக்கியமானவர் ரிஷப் பண்ட். பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் மீது எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கான எதிர்பார்ப்பு கேப்டன் ரிஷப் பண்ட்டின் மீதும் இருக்கிறது. ஏனெனில், ரோஹித்திற்கு பிறகான இந்திய அணியின் கேப்டன்சி ரேஸில் ரிஷப் பண்ட்டும் மிக முக்கிய போட்டியாளராக இருக்கிறார். ஆனால், இவர் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இதுவரை கேப்டன்சி செய்யவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் கடைசி லீக் போட்டியை டெல்லி வென்றால் ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்று விடலாம் என்ற சூழலில் அந்த போட்டியை டெல்லி தோற்று ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பையும் இழந்திருக்கும்.


டெல்லி அணியின் தோல்விக்கு ரிஷப் பண்ட்டின் வீரியமற்ற கேப்டன்சியும் மிக முக்கிய காரணமாக இருந்தது. இக்கட்டான சூழல்கள் சரியாக ரிவியூவ் எடுப்பதில் கூட கடுமையாக திணறியிருந்தார். ஒரு போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக நடுவரின் முடிவில் திருப்தியில்லாமல் நடுவருக்கு எதிராக ஆவேசமாக எதிர்வினைகளை செய்ய முற்பட்டார். இவையெல்லாம் ஒரு கேப்டனாக ரிஷப் பண்ட் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்பதையே காட்டியது.


இப்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இந்திய அணியை ரிஷப் பண்ட்தான் வழிநடத்துகிறார். பெரிதாக எந்த சர்ப்ரைஸூம் இல்லாமல் அதே வீரியமற்ற கேப்டன்சியின் விளைவு இந்திய அணி முதல் 2 டி20 போட்டிகளையுமே தோற்று நிற்கிறது.




சஞ்சு சாம்சன், நீண்ட காலமாகவே ரசிகர்களுக்கு இவர் மீது மிகப்பெரிய பரிவு உண்டு. நல்ல திறமையான வீரர், நன்றாக ஆடுகிறார். ஆனால், இந்திய அணியில் மட்டும் இவரை தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லையே என்பதுதான் ரசிகர்களின் ஆதங்கள். ஆனால், உண்மை என்னவெனில் சாம்சன் பல முறை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு முறையுமே தனது சீரற்ற பெர்ஃபார்மென்ஸ்களால் கடுமையாக சொதப்பி ஏமாற்றமே அளித்திருப்பார். அடுத்த தொடரிலேயே அவரை நீக்கிவிடுவார்கள்.


இவர்களெல்லாம் ஒரு சாம்பிள்தான். இன்னும் இந்த பட்டியலை கொஞ்ச தூரத்திற்கு நீட்டிக்க முடியும். வருங்காலத்திற்கான வாய்ப்பாக பார்க்கப்படும் அடுத்தக்கட்ட வீரர்கள் இப்படியாக தங்களை நிலைப்படுத்திக் கொள்ள தடுமாறுவது ஏமாற்றம்தான். ஆனால், இந்த ஏமாற்றம் இந்திய அணிக்கு மட்டுமில்லை. வேறு பல அணிகளுக்குமே நடந்திருக்கிறது. ஒரு அணி தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்ள நினைக்கும் சூழலில் இந்த மாதிரியான சறுக்கல்களெல்லாம் ஏற்படக்கூடியது. இந்த சறுக்கல்களிலிருந்து அந்த இளம் வீரர்கள் எவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்து அணியை வலுவாக்குகிறார்கள் என்பதே முக்கியம். ரிஷப் பண்டை குறை கூறுகிறோம். ஆனால், அவரை குறைசொல்லும்போது அவருடைய வயதை மறந்துவிடுகிறோம். அவருக்கு 24 வயதுதானே ஆகிறது? தவறு செய்து விழுந்து விழுந்து எழுந்தரித்துக் கொள்ள அத்தனை சௌகரியமும் உடைய வயதுதானே. ரிஷப் பண்ட்டிற்கு மட்டுமல்ல, அத்தனை இளம் இந்திய வீரர்களுக்குமே இது பொருந்தும். விழுந்து விழுந்து எழும் வயதுதானே. விழட்டும்...எழட்டும்!